Enable Javscript for better performance
அரையிறுதியில் ஜோகோவிச்-ஜுவான் மோதல்- Dinamani

சுடச்சுட

    
    Juan

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 8-ம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவும் மோதுகின்றனர்.

    லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (5), 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் 7-ம் நிலை வீரரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார். இந்த விம்பிள்டன் போட்டியில் இதுவரை ஒரு செட்டைக்கூட இழக்காத ஜோகோவிச், விம்பிள்டன் போட்டியில் 4-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது அவருக்கு 13-வது அரையிறுதியாகும். 2011-ல் விம்பிள்டனில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், "இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எனது வாழ்க்கையில் புல்தரைப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். தாமஸ் பெர்டிச்சுக்கு எதிரான இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானதாக இருந்தது' என்றார்.

    ஜுவான் மார்ட்டின் வெற்றி: மற்றொரு காலிறுதியில் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ 6-2, 6-4, 7-6 (5) என்ற நேர் செட்களில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை வீழ்த்தினார். இதன்மூலம் விம்பிள்டனில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஜுவான் மார்ட்டின். இந்தப் போட்டியின்போது ஜுவான் மார்ட்டின் தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக 5 நிமிடங்கள் சிகிச்சை பெற்றார்.

    போட்டிக்குப் பிறகு மார்ட்டின் கூறுகையில், "அடுத்த சில தினங்களில் இந்த காயத்திலிருந்து மீளாவிட்டால், அது ஆபத்தாகிவிடும். காயத்தால் ஏற்பட்ட வலியின் காரணமாக காலிறுதியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். எனினும் மருத்துவரின் சிகிச்சையால் அதிலிருந்து தப்பித்தேன். இந்தப் போட்டியில் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். இந்தத் தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றார்.

    காலிறுதியில் போபண்ணா, சானியா ஜோடிகள்: புதன்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சீனாவின் ஜீ செங் ஜோடி 7-6 (4), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ஜோகன் புரூன்ஸ்ட்ரோம்-ஹங்கேரியின் கேட்டலின் மரோஸி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    இதேபோல் இந்தியாவின் சானியா மிர்சா-ருமேனியாவின் ஹரியா டீக்கா ஜோடியும் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் எரிக்-பிரான்ஸின் அலைஸ் கார்னெட் ஜோடியை வீழ்த்தியது.

    அரையிறுதியில் பயஸ், போபண்ணா ஜோடிகள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி 4-6, 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜூலியானே பென்னட்டா-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் ரோஜர் வேஸலின் ஜோடி 7-5, 7-6 (3), 6-7 (4), 6-7 (3), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின் ராபர்ட் லிட்ஸ்டெட்-டேனியல் நெஸ்டர் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    முதல் முறையாக விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள போபண்ணாவுக்கு இது 3-வது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியாகும்.

    போபண்ணா ஜோடி, தங்களின் அரையிறுதியில் அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களான பாப் பிரையன்-மைக் பிரையன் ஜோடியை சந்திக்கிறது.

    முன்னதாக பிரையன் சகோதரர்கள் ஜோடி தங்களின் காலிறுதிச் சுற்றில் 7-6 (5), 7-6 (3), 7-6 (4) என்ற நேர் செட்களில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ஆஸ்திரியாவின் ஜூலியன் நோவ்லே ஜோடியை வீழ்த்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai