Enable Javscript for better performance
ஆசிய தடகளம்: முதல் நாளில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்- Dinamani

சுடச்சுட

    
    om

    ஆசிய தடகளப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

    குண்டு எறிதல் வீரர் ஓம் பிரகாஷ் கர்ஹானா, நீளம் தாண்டுதல் வீராங்கனை மயூகா ஜானி ஆகியோர் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கங்களை வென்று தந்தனர்.

    20-வது ஆசிய தடகளப் போட்டி புணேவில் உள்ள சிவ சத்ரபதி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. புணேவில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. வீரர், வீராங்கனைகளும் பெரும் அவதிக்குள்ளாயினர்.

    ஓம் பிரகாஷுக்கு வெண்கலம்: புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஓம் பிரகாஷ், தனது 2-வது முயற்சியில் 19.45 மீ. தூரம் குண்டு எறிந்ததன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    ஆசிய சாதனையை வைத்திருப்பவரான செüதி அரேபியாவின் சுல்தான் அப்துல் மஜீத் (19.68 மீ. தூரம்) தங்கப் பதக்கமும், சீனதைபேவின் சங் மிங் ஹியாங் (19.61 மீ. தூரம்) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இரு இந்தியர்களான இந்திரஜித் சிங் (19.31 மீ.) 4-வது இடத்தையும், சத்யேந்திரா சிங் (18.01 மீ.) 8-வது இடத்தையும் பிடித்தனர். ஆசிய தடகளப் போட்டிகளில் ஓம் பிரகாஷுக்கு இது 3-வது பதக்கம் ஆகும். ஓம் பிரகாஷ், 2009-ல் சீனாவின் குவாங்ஜெüவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கமும், 2011-ல் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மயூகா வெண்கலம்: மகளிர் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் மயூகா ஜானி, தனது 3-வது முயற்சியில் 6.30 மீ. தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பானின் சஜிக்கோ மசூமி (6.55 மீ.) தங்கமும், உஸ்பெகிஸ்தானின் அனாஸ்டாஸியா (6.36 மீ.) வெள்ளியும் வென்றனர். மயூகா ஜானி, கடந்த முறை இதேபிரிவில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணா பூனியா ஏமாற்றம்: மகளிர் வட்டு எறிதல் பிரிவில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் கிருஷ்ணா பூனியா 4-வது இடத்தையே (55.01 மீ.) பிடித்தார். இதேபோல் மகளிர் 10,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் பிரீஜா ஸ்ரீதரனும் 4-வது இடத்தையே (33.41.97) பிடித்தார்.

    இறுதிச்சுற்றில் தமிழக வீரர்!

    ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், முகமது குன்ஹி ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்களில் ஆரோக்கிய ராஜீவ், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகளிர் 400 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் பூவம்மா, அனு மரியம் ஜோஸ் ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    உதயலட்சுமி நீக்கம்

    புணே, ஜூலை 3: ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய குண்டு எறிதல் வீராங்கனை உதயலட்சுமி, ஆசிய தடகளப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான 39 வயது உதயலட்சுமி, கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்றார். அப்போட்டியில் பங்கேற்றவர்களிடம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா), சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து சோதனை செய்தது. அதில் உதயலட்சுமி ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து புணேவில் புதன்கிழமை தொடங்கிய ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்கவிருந்த உதயலட்சுமி அதிரடியாக நீக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai