Enable Javscript for better performance
161 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை- Dinamani

சுடச்சுட

    

    161 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

    By dn  |   Published on : 04th July 2013 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் 161 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டது இந்தியா.

    இதன்மூலம் இந்தத் தொடரில் இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இந்தியா.

    முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த இந்தியா 44.5 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது.

    ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேப்டன் தோனி காயம் காரணமாக விலகிவிட்டதால், கோலி தலைமையில் களமிறங்கியது இந்தியா. தோனிக்குப் பதிலாக முரளி விஜயும், புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக சமி அஹமதுவும் சேர்க்கப்பட்டனர்.

    இலங்கை அபாரம்: டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் உபுல் தரங்கா-மஹேல ஜெயவர்த்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38.4 ஓவர்களில் 213 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் கோலி, 7 பெüலர்களை பயன்படுத்தியபோதும், இலங்கை அணி 213 ரன்களை எட்டும் வரை தொடக்க ஜோடியை வீழ்த்த முடியவில்லை.

    இந்த ஆட்டத்தில் சதமடித்தன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது 16-வது சதத்தைப் பூர்த்தி செய்த ஜெயவர்த்தனா, 112 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து தரங்காவுடன் இணைந்தார் கேப்டன் மேத்யூஸ். இந்த ஜோடி அதிரடியாக விளையாட 50 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது இலங்கை.

    தரங்கா 159 பந்துகளில் 3 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 174, மேத்யூஸ் 29 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 16 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 180 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தோல்வி: 349 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணியில் முதல் விக்கெட்டாக ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, சரிவு ஆரம்பமானது. இதன்பிறகு ஷிகர் தவன் 24, கோலி 2, முரளி விஜய் 30, கார்த்திக் 22, ரெய்னா 33, அஸ்வின் 4 ரன்கள் என வேகமாக வெளியேற, 44.5 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.

    ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் தனிநபராகப் போராடிய ஜடேஜா, 62 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கையின் உபுல் தரங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் இந்தத் தொடரில் இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இந்தியா. முன்னதாக முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்டது இந்தியா. இந்த ஆட்டத்தில் இந்தியாவை 161 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் போனஸ் புள்ளியோடு மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்றது இலங்கை.

    தற்போதைய நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் 9 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இலங்கை 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளையும், செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையையும் சந்திக்கிறது இந்தியா. அந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும்.

    தப்பிப் பிழைத்த தரங்கா, ஜெயவர்த்தனா!

    இந்த ஆட்டத்தில் தரங்கா 2 ரன்களில் இருந்தபோது ரன் அவுட்டிலிருந்து தப்பினார். அவரை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை ரோஹித் சர்மா கோட்டைவிட்டார். இதேபோல் தரங்கா 91 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது முறையாக வாழ்வுபெற்றார். இஷாந்த் பந்துவீச்சில் தரங்கா கொடுத்த கேட்ச்சை உமேஷ் யாதவ் கோட்டைவிட்டார்.

    ஜெயவர்த்தனா 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை முரளி விஜய் கோட்டைவிட்டார்.

    போட்டித் துளிகள்...

    * ஒருநாள் போட்டி வரலாற்றில் (3382 ஒருநாள் போட்டிகள்) ஒரு போட்டியில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களையும் முழுமையாக விளையாடியபோதும், ஒரு விக்கெட்டுக்கு மேல் இழக்காத முதல் அணி என்ற சாதனையை இலங்கை படைத்தது.

    * இந்த ஆட்டத்தில் தரங்கா அடித்த 174 ரன்களே ஒருநாள் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னர் 2011 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக அடித்த 133 ரன்களே அவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

    * இந்த ஆட்டத்தில் தரங்கா 21 ரன்கள் எடுத்தபோது, ஒருநாள் போட்டியில் 5,000 ரன்களை எட்டினார். 164-வது போட்டியில் அவர் இந்த ரன்களை எட்டியுள்ளார். இதன்மூலம் 5,000 ரன்களை எட்டிய 9-வது இலங்கை வீரர் என்ற பெருமையை தரங்கா பெற்றார்.

    * கடந்த 50 ஒருநாள் போட்டிகளில் ஜெயவர்த்தனா அடித்த முதல் சதம் இது. முன்னதாக 2011-ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயவர்த்தனா சதமடித்தார். அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் சதமடித்துள்ளார்.

    * ரன்கள் அடிப்படையில் இந்திய அணி கண்ட மோசமான தோல்வி இதுதான். முன்னதாக 2002-ல் மேற்கிந்தியத் தீவுகளிடம் 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதே இந்திய அணியின் மோசமான தோல்வியாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai