Enable Javscript for better performance
ஆசிய தடகளம்: தங்கம் வென்றார் விகாஸ் கெளடா- Dinamani

சுடச்சுட

    
    vikasgowda

    ஆசிய தடகளப் போட்டியில் ஆடவர் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கெளடா தங்கம் வென்றார்.

    2-வது நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

    20-வது ஆசிய தடகளப் போட்டி புணேவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் விகாஸ் கெüடா, தனது 4-வது முயற்சியில் 64.90 மீ. தூரம் வட்டு எறிந்ததன் மூலம் தங்கம் வென்றார். இந்த தங்கப் பதக்கம் கெüடாவுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்தது. வெள்ளிக்கிழமை (ஜூலை 5) கெüடாவுக்கு 31-வது பிறந்த நாளாகும்.

    கெüடா, ஆசிய தடகளப் போட்டியில் வென்ற 3-வது பதக்கம் இது. முன்னதாக 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டிகளில் அவர் வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

    பூவம்மாவுக்கு வெள்ளி: மகளிர் 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பூவம்மா, 53.37 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீன வீராங்கனை ஸôவோ யான்மின் 52.49 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதேபிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை அனு மரியம் ஜோஸ் 4-வது இடத்தையே பிடித்தார்.

    ரத்திரம் சைனிக்கு வெண்கலம்: ஆடவர் 10,000 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் ரத்திரம் சைனி (29:35.42) வெண்கலம் வென்றார்.

    ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் குன்கி முகமது (44.61) 5-வது இடத்தையும், ஆரோக்கிய ராஜீவ் (46.63) 6-வது இடத்தையும் பிடித்தனர்.

    ஆரோக்கிய ராஜீவ், திருச்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதிச்சுற்றில் காயத்ரி!

    மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீராங்கனைகளான காயத்ரி, ஹேமாஸ்ரீ ஆகிய இருவரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதேபோல் ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் இந்தியாவின் சித்தானந்த் திங்கலாயா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    சஹானா குமாரி ஏமாற்றம்: மகளிர் உயரம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்தவரான இந்தியாவின் சஹானா குமாரி, 4-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றினார். அவர் 1.86 மீ. உயரமே தாண்டினார்.

    ஆசிய சாதனை: ஆடவர் டெகத்லான் பிரிவில் கஜகஸ்தானின் டிமிட்ரி கர்போவ் 8,037 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றதோடு, இந்தப் போட்டியில் டெகத்லானில் புதிய சாதனையையும் பதிவு செய்தார். இவர் 2004 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனா முதலிடம்: இரண்டு நாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு இதுவரை 5 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai