Enable Javscript for better performance
விம்பிள்டன்: இறுதிச் சுற்றில் லிசிக்கி, பர்டோலி- Dinamani

சுடச்சுட

    
    tennis

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கி, பிரான்ஸின் மரியோன் பர்டோலி ஆகியோர் மோதுகின்றனர். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

    லண்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் பிரான்ஸின் மரியோன் பர்டோலி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் ஃபிலிப்கின்ûஸ வீழ்த்தி, இறுதிச்சுற்றை உறுதி செய்தார்.

    இதற்கு முன்னர் 2007-ல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மரியோன் பர்டோலி, அதில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வி கண்டார். இதுவரை அவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சபைன் லிசிக்கி: மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கி 6-4, 2-6, 9-7 என்ற செட் கணக்கில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். லிசிக்கியும், இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்றதில்லை.

    பயஸ் ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி 6-3, 4-6, 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் இவான் டோடிக்-பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

    பிரையன் சகோதரர்களிடம் போராடி வீழ்ந்த போபண்ணா ஜோடி: மற்றொரு ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பிரான்ஸின் ரோஜர் வேஸலின் ஜோடி கடும் போராட்டத்துக்குப் பிறகு அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடியிடம் தோல்வி கண்டது. 2 மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 7-6 (4), 4-6, 3-6, 7-5, 3-6 என்ற செட் கணக்கில் பிரையன் சகோதரர்களிடம் தோல்வி கண்டது.

    அரையிறுதியில் முர்ரே, ஜானோவிச்: புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 4-6, 3-6, 6-1, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் விம்பிள்டனில் தொடர்ந்து 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் முர்ரே. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முர்ரேவுக்கு இது 13-வது அரையிறுதி ஆட்டமாகும். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக அரையிறுதி ஆட்டங்களில் விளையாடியிருந்த சகநாட்டவரான பிரெட் ஃபெர்ரியின் சாதனையை சமன் செய்தார் முர்ரே.

    முர்ரே வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் போலந்தின் ஜெர்ஸி ஜானோவிச்சை சந்திக்கிறார். ஜானோவிச் தனது காலிறுதியில் 7-5, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான லூகாஸ் குபோட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் போலந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜானோவிச்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai