Enable Javscript for better performance
ஆசிய தடகளம்: தமிழக வீரர் பிரேம் குமாருக்கு வெள்ளி- Dinamani

சுடச்சுட

    
    premkumar

    ஆசிய தடகளப் போட்டியில் 3-வது நாளான வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.

    தமிழகத்தைச் சேர்ந்த பிரேம் குமார் வெள்ளிப் பதக்கமும், ஹேமாஸ்ரீ வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    20-வது ஆசிய தடகளப் போட்டி புணேவில் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் பிரேம் குமார், தனது கடைசி முயற்சியில் 7.92 மீ. தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதே பிரிவில் சீன வீரர்களான வாங் ஜியானன் 7.95 மீ. தூரம் தாண்டி தங்கமும், டாங் காங்ஜென் 7.89 மீ. தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவரான பிரேம் குமார், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் 8 மீ. தூரம் தாண்டி அப்போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹேமாஸ்ரீக்கு வெண்கலம்: மகளிர் 100 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஹேமாஸ்ரீ, 14.01 விநாடிகளில் இலக்கை எட்டியதன் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேநேரத்தில் மற்றொரு தமிழக வீராங்கனையான காயத்ரி, 14.07 விநாடிகளில் இலக்கை எட்டி, 4-வது இடத்தையே பிடித்தார்.

    சுதா சிங்குக்கு வெள்ளி: மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீராங்கனை சுதா சிங், 9 நிமிடம், 56.27 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்த சுதா சிங், இந்த முறை தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வெள்ளிப் பதக்கமே வென்றுள்ளார். இந்தப் பிரிவில் பஹ்ரைனின் ரூத் சீபெட் 9 நிமிடம், 40.84 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை சென்றார்.

    சமர்ஜித் சிங்குக்கு வெண்கலம்: ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சமர்ஜித் சிங், 75.03 மீ. தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

    6-வது இடத்தில் இந்தியா: 3-வது நாளான வெள்ளிக்கிழமை இந்தியா, 4 பதக்கங்களை வென்றபோதிலும், ஒரு தங்கப் பதக்கம்கூட கிடைக்கவில்லை.

    இதனால் 3-வது நாள் இந்தியாவுக்கு ஏமாற்றமானதாகவே அமைந்தது. இதனால் 2-வது நாளில் பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த இந்தியா, 3-வது நாள் முடிவில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai