Enable Javscript for better performance
கோலி சதம்; இந்தியா 311 ரன்கள் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    
    kohli

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது.

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 83 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் குவித்தார். டிரினிடாட் அன்ட் டொபாக்கோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் டுவைன் பிராவோ, இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

    ஷிகர் தவன் 69: இதையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23.1 ஓவர்களில் 123 ரன்கள் சேர்த்தது. சுனில் நரேன் வீசிய 23-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விரட்டிய ஷிகர் தவன், கெமர் ரோச் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 77 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கேப்டன் கோலி. மறுமுனையில் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 78 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    கோலி சதம்: பின்னர் வந்த ரெய்னா 10, தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, முரளி விஜய் களம்புகுந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய விஜய், 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது.

    இதையடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ரன் அவுட்டாக, கோலியுடன் இணைந்தார் அஸ்வின். 55 பந்துகளில் அரைசதம் கண்ட கோலி, அதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகள் பெüலர்களை பந்தாடினார். இதனால் அவர் 81 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் அவருக்கு இது 14-வது சதமாகும். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் கோலி ஆட்டமிழக்க, இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அஸ்வின் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி-அஸ்வின் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் குவித்தது. அதில் 65 ரன்கள் கோலியால் எடுக்கப்பட்டதாகும். கோலியின் அதிரடியால் கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்தியா 101 ரன்கள் குவித்தது.

    மழையால் பாதிப்பு: பின்னர் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சார்லஸ் 33, சாமுவேல்ஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முன்னதாக கெயில் 10, டேரன் பிராவோ 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai