Enable Javscript for better performance
ஆசிய தடகளம்: 4-வது நாளில் இந்தியாவுக்கு ஏமாற்றம்!- Dinamani

சுடச்சுட

    
    polevault

    ஆசிய தடகளப் போட்டியின் 4-வது நாளான சனிக்கிழமை இந்தியாவுக்கு ஒரு பதக்கம்கூட கிடைக்கவில்லை.

    இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதேநேரத்தில் அண்டை நாடான சீனாவுக்கு 4 தங்கப் பதக்கம் கிடைத்தது.

    20-வது ஆசிய தடகளப் போட்டி புணேவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 நாள்களிலும் பதக்கம் வென்ற இந்தியா, 4-வது நாளிலும் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சினி, மெர்லின் ஜோசப், ஸ்ரபானி நந்தா, ஆசா ராய் ஆகியோர் அடங்கிய அணி 4-வது இடம்பிடித்ததே இந்தியாவின் சிறப்பான போட்டியாக அமைந்தது. இந்தப் பிரிவில் சீனா தங்கமும், ஜப்பான் வெள்ளியும், தாய்லாந்து வெண்கலமும் வென்றன.

    சுஷ்மிதாவுக்கு 5-வது இடம்: மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் சுஷ்மிதா சின்கா ராய் 5,328 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார். 7 வகையான போட்டிகளைக் கொண்ட இந்த விளையாட்டில் 4-வது போட்டி வரை 2-வது இடத்தில் இருந்த சுஷ்மிதா, 5-வது போட்டியில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 6-வது போட்டியான ஈட்டி எறிதலில் பின்னடைவை சந்தித்த சுஷ்மிதாவால், கடைசிப் போட்டியான 800 மீ. ஓட்டத்தில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு 5-வது இடமே கிடைத்தது.

    இந்தப் பிரிவில் தாய்லாந்தின் வாஸôனா வினாதோ தங்கமும் (5818 புள்ளிகள்), உஸ்பெகிஸ்தானின் எகடெரினா வோரோனினா வெள்ளியும் (5,599), ஜப்பானின் கிரியாமா வெண்கலமும் (5,451) வென்றனர்.

    இறுதிச் சுற்றில் சதீந்தர் சிங்: ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் சதீந்திர் சிங், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோல் 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் மன்ஜீத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    இதேபோல் மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் ஆஷா ராய், துதி சந்த், ஸ்ரபானி நந்தா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் இந்திய வீரர்கள் யாரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்தியாவின் அமியா குமார் மாலிக், பிரதீக் நினாவே ஆகியோர் அரையிறுதி வரை மட்டுமே முன்னேறினர்.

    9 பேர் பங்கேற்ற மகளிர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் நேஹா சிங், நவ்ஜீத் கெüர் ஆகியோர் முறையே கடைசி இரு இடங்களைப் பிடித்தனர்.

    புதிய சாதனைகள்! மகளிர் கம்பு ஊன்றித் தாண்டுதலில் சீனாவின் லீ லிங் 4.54 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றதோடு, ஆசிய தடகளப் போட்டியில் புதிய சாதனையும் படைத்தார். முன்னதாக 2005-ல் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் சீனாவின் கோவ் சூயிங் 4.53 மீ. உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.

    மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் சீனாவின் லீ லிங்வெய் 60.65 மீ. தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றதோடு, புதிய சாதனையும் படைத்தார். முன்னதாக 2007-ல் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தாய்லாந்தின் பாமாங் 58.35 மீ. தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது.

    சீனா தொடர்ந்து முதலிடம்: பதக்கப் பட்டியலில் சீனா 12 தங்கம் உள்பட 21 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 4-வது நாளில் பதக்கம் ஏதும் வெல்லாதபோதிலும் தொடர்ந்து 6-வது இடத்திலேயே உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai