Enable Javscript for better performance
இறுதி ஆட்ட வாய்ப்பை தக்கவைத்தது இந்தியா- Dinamani

சுடச்சுட

    
    kholi

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 102 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்தியா.

    இதன்மூலம் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் இந்தியா தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 83 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் பேட் செய்தபோது, மழை குறுக்கிடவே, அந்த அணிக்கு 39 ஓவர்களில் 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 34 ஓவர்களில் 171 ரன்களுக்கு சுருண்டது.

    டிரினிடாட் அன்ட் டொபாக்கோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23.1 ஓவர்களில் 123 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 69, ரோஹித் சர்மா 46 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    கோலி சதம்: பின்னர் வந்த ரெய்னா 10, தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முரளி விஜய் 27 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு வந்த ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ரன் அவுட்டாக, கோலியுடன் இணைந்தார் அஸ்வின்.

    அஸ்வின் கோலி ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்க்க, இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது.

    அஸ்வின் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலியின் அதிரடியால் கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்தியா 101 ரன்கள் குவித்தது.

    மழையால் பாதிப்பு: பின்னர் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெயில் 10, டேரன் பிராவோ 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 39 ஓவர்களில் 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது சாமுவேல்ஸ் 6, போலார்ட் 0, சார்லஸ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் தோல்வி தவிர்க்க முடியாததானது. பின்வரிசையில் கெமர் ரோச் 34, சுனில் நரேன் 21 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 34 ஓவர்களில் 171 ரன்களுக்கு சுருண்டது.

    இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    போனஸ் புள்ளி: இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்கு போனஸ் புள்ளியுடன் மொத்தம் 5 புள்ளிகள் கிடைத்தன.

    இலங்கை-மே.இ.தீவுகள் இன்று பலப்பரீட்சை

    போர்ட் ஆஃப் ஸ்பெயின், ஜூலை 6: முத்தரப்புத் தொடரில் இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

    போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறும்பட்சத்தில் அந்த அணி இறுதி ஆட்டத்தில் விளையாடுவதை உறுதி செய்துவிடும். ஒருவேளை தோற்றால், இலங்கை-இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். தற்போதைய நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் 9 புள்ளிகளுடனும், இந்தியா, இலங்கை ஆகியவை தலா 5 புள்ளிகளுடனும் உள்ளன.

    போட்டி நேரம்: இரவு 7

    நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

    இலங்கைக்கு எதிரான ஆட்டம்: பிராவோவுக்கு தடை

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் டுவைன் பிராவோவுக்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதன்மூலம் ஓர் ஆண்டுக்குள் இரண்டாவது முறையாக பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டுள்ளது மேற்கிந்தியத் தீவுகள். இதனால் அந்த அணியின் கேப்டன் டுவைன் பிராவோ ஓர் ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோ விளையாடமாட்டார்.

    முன்னதாக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

     

    ரெய்னா - ஜடேஜா மோதல்

     

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது ரெய்னா கேட்ச்சை விட்டது தொடர்பாக அவருக்கும், ஜடேஜாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    34-வது ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் சுனில் நரேன், இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து ரெய்னாவின் அருகில் சென்ற ஜடேஜா, அவரிடம் ஏதோ சொல்ல, அதற்கு ரெய்னா பதில்கூற, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கேப்டன் கோலி தலையிட்டு ரெய்னாவை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஜடேஜாவின் முந்தைய ஓவரில் சுனில் நரேன் கொடுத்த கேட்ச்சை ரெய்னா பிடிக்கவில்லை. இதனால் ஜடேஜா எரிச்சலடைந்தார். இதன் காரணமாகவே அவர்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

    அடுத்த பந்தில் மேற்கிந்தியத் தீவுகளின் கடைசி விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அப்போது அவரின் அருகில் சென்ற ரெய்னா, அவரிடம் ஏதோ சொல்லிவிட்டு, அவரை கட்டியணைத்தார். அப்போது அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

     

    போட்டித் துளிகள்...

    * இந்த ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ரன் அடிப்படையில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா. இதற்கு முன்னர் 2002-ல் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்ததே பெரிய வெற்றியாக இருந்தது.

    * போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியா 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் 5 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

    * இந்த ஆட்டத்தில் 311 ரன்கள் குவித்ததன் மூலம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது இந்தியா. இதற்கு முன்னர் 260 ரன்கள் (2002-ல்) எடுத்ததே போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

    * இந்த ரன் (311) மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இந்திய அணி எடுத்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். கிங்ஸ்டனில் 2009-ல் நடைபெற்ற ஆட்டத்தில் 339 ரன்கள் குவித்ததே, மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

    * ஷிகர் தவன் 50 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த 5 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

    * இந்த ஆட்டத்தில் தவன்-ரோஹித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு எடுத்த 123 ரன்கள், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவின் தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்னர் 1997-ல் நடைபெற்ற ஆட்டத்தில் சச்சின்-கங்குலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    * கோலி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2-வது சதத்தையும், ஒருநாள் போட்டியில் 14-வது சதத்தையும் பதிவு செய்தார். இந்திய அணியின் கேப்டனாக முதல் சதமடித்தார்.

    * போர்ட் ஆஃப் ஸ்பெயினில் சதமடித்த முதல் கேப்டன் கோலி ஆவார். ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதமடித்த 3-வது இந்திய கேப்டன் என்ற பெருமையும் கோலி வசமானது. சேவாக் (219 ரன்கள்), ராகுல் திராவிட் (105) ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதமடித்த மற்ற இந்திய கேப்டன்கள் ஆவர்.

    * ஒருநாள் போட்டியில் 14-வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றார் கோலி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai