Enable Javscript for better performance
ஆசிய தடகளம்: கடைசி நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 8 பதக்கங்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய தடகளம்: கடைசி நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 8 பதக்கங்கள்

    By dn  |   Published on : 08th July 2013 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    India

    ஆசிய தடகளப் போட்டியின் கடைசி நாளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்கள் கிடைத்தன.

    புணேவில் நடைபெற்ற 20-வது ஆசிய தடகளப் போட்டி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் நிர்மலா, தின்டு லூக்கா, அனு மரியம் ஜோஸ், பூவம்மா ஆகியோர் அடங்கிய அணி, 3 நிமிடம் 32.26 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது.

    இதன்மூலம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஆகஸ்ட் 10 முதல் 18 வரை நடைபெறவுள்ள உலக தடகளப் போட்டிக்கும் இந்திய "ரிலே' அணி தகுதி பெற்றது. ஆசிய தடகளப் போட்டியில் 4*400 மீ. தொடர் ஓட்டத்தில் இந்தியா 9-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதே பிரிவில் சீனா (3:35.31) வெள்ளியும், ஜப்பான் (3:35.72) வெண்கலமும் வென்றது.

    ரஞ்சித் மகேஷ்வரிக்கு வெள்ளி: ஆடவர் மும்முறைத் தாண்டுதலில் இந்தியாவின் ரஞ்சித் மகேஷ்வரி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழக வீரரான இவர், 16.76 மீ. தூரம் தாண்டினார். இதே பிரிவில் சீனாவின் காவ் சூவோ (16.77 மீ.) தங்கமும், இந்தியாவின் அரவிந்தர் சிங் (16.58 மீ.) வெண்கலமும் வென்றனர்.

    தின்டு லூக்காவுக்கு வெண்கலம்: மகளிர் 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் தின்டு லூக்கா வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் 2 நிமிடம் 4.16 விநாடிகளில் இலக்கை எட்டினார். இவர் 2011-ல் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியிலும் இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    நிதின் தாமஸூக்கு வெள்ளி: ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் நிதின் தாமஸ் வெள்ளி வென்றார். இந்தப் பிரிவில் நிதின் தாமஸ், சீனாவின் பை ஷியாவோலியாங், ஈரானின் கெய்வான் ஆகியோர் அதிகபட்சமாக 2.21 மீ. உயரம் தாண்டினார்.

    இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க, முந்தைய வாய்ப்புகளில் அவர்கள் தாண்டிய தூரம் கணக்கிடப்பட்டது. அதன்படி ஷியாவோலியாங்குக்கு தங்கமும், நிதின் தாமஸூக்கு வெள்ளியும், கெய்வானுக்கு வெண்கலமும் கிடைத்தன.

    200 மீ. ஓட்டத்தில் 2 பதக்கம்: மகளிர் 200 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் ஆஷாய் ராய் வெள்ளியும் (23.71 விநாடிகள்), இந்தியாவின் துதி சந்த் (23.82) வெண்கலமும் வென்றனர். இந்தப் பிரிவில் கஜகஸ்தானின் விக்டோரியா (23.62) தங்கம் வென்றார். அதேநேரத்தில் இந்தப் பிரிவில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானின் முன்னணி வீராங்கனையான ஃபுகுஷிமா 4-வது இடத்தையே பிடித்தார்.

    சதீந்தர் சிங்குக்கு வெண்கலம்: ஆடவர் 400 மீ. தடை தாண்டுதல் ஒட்டத்தில் இந்தியாவின் சதீந்தர் சிங் (50.35 விநாடிகள்) வெண்கலம் வென்றார். ஜப்பானின் யாசூகிரோ தங்கமும் (49.86), சீனாவின் செங் வென் (50.7) வெள்ளியும் வென்றனர்.

    சீனா முதலிடம்

    பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்தது. அந்நாட்டின் சார்பில் இப்போட்டியில் பங்கேற்ற அணியில் முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இரண்டாம் நிலை வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணியே பங்கேற்றபோதும், பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    சீனா 16 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றது. 1983 முதல் தற்போது வரை தொடர்ந்து 15-வது முறையாக பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சீனா.

    பஹ்ரைன் 5 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 4 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய நாடான இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் 6-வது இடத்தைப் பிடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai