Enable Javscript for better performance
ஜெர்மன் கிராண்ட்ப்ரீ: வெட்டல் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    Vettel

    ஜெர்மன் கிராண்ட்ப்ரீ கார் பந்தயத்தில் ரெட் புல் டிரைவரான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி கண்டார்.

    இதன்மூலம் தாய் நாடான ஜெர்மனியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரான வெட்டல்.

    இந்த சீசனுக்கான ஃபார்முலா 1 கார் பந்தயம் 19 சுற்றுகளைக் கொண்டதாகும். இதன் 9-வது சுற்று ஜெர்மனி கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் ஜெர்மனியின் நர்பர்கிரிங் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    60 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் 2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட செபாஸ்டியன் வெட்டல், கடும் போட்டிக்குப் பிறகு 1 மணி நேரம், 41 நிமிடங்கள், 14.711 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்த சீசனில் 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் வெட்டல்.

    3 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெட்டல், தனது கார் பந்தய வாழ்க்கையில் பெற்ற 30-வது வெற்றி இதுவாகும். ஃபார்முலா 1 வரலாற்றில் ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.

    வெட்டலைவிட ஒரு விநாடி தாமதமாக வந்த லோட்டஸ் டிரைவர் கிமி ராய்க்கோனென் 2-வது இடத்தையும், அதே அணியின் மற்றொரு டிரைவரான ருமெய்ன் கிராஸ்ஜியன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    ஃபெராரி டிரைவரான ஃபெர்னாண்டோ அலோன்ஸô 4-வது இடத்தையும், முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் 5-வது இடத்தையும் பிடித்தனர்.

    மெக்லாரன் டிரைவர் ஜென்சன் 6-வது இடத்தையும், ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவரான மார்க் வெப்பர் 7-வது இடத்தையும் பிடித்தனர். இந்திய அணியான ஃபோர்ஸ் இந்தியா அணியின் டிரைவர்கள் பால் டி ரெஸ்டா 11-வது இடத்தையும், அட்ரியான் சுதில் 13-வது இடத்தையும் பிடித்தனர்.

    கேமராமேனுக்கு காயம்: போட்டியின்போது 9-வது சுற்றை முடித்த ரெட்புல் டிரைவர் மார்க் வெப்பர், டயர் மாற்றுவதற்காக வந்தார். அப்போது அவருடைய காரில் இருந்த டயரை மெக்கானிக் வேகமாக கழற்றியபோது, அது அருகில் இருந்த கேமராமேன் மீது விழுந்தது. இதில் காயமடைந்த கேமரா மேன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    வெட்டல் முதலிடம்: இந்த சீசனில் 9 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், செபாஸ்டியன் வெட்டல் 157 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஃபெராரி டிரைவான அலோன்ஸô 123 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், லோட்டஸ் டிரைவரான கிமி ராய்க்கோனென் 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    ரெட்புல் அணி முதலிடம்: அணிகள் வரிசையில் ரெட்புல் அணி 250 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மெர்ஸிடஸ் அணி 183 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஃபெராரி அணி 180 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai