Enable Javscript for better performance
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வெல்ல ஆன்டி முர்ரே இலக்கு!- Dinamani

சுடச்சுட

    

    அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வெல்ல ஆன்டி முர்ரே இலக்கு!

    By dn  |   Published on : 09th July 2013 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    murray

    அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளதாக விம்பிள்டன் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே தெரிவித்துள்ளார்.

    லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரே 6-4, 7-6, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

    இதன்மூலம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் என்ற சாதனையைப் படைத்த முர்ரே, பிரிட்டன் மக்களின் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

    விம்பிள்டன் வெற்றியால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக, இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்த முர்ரே, திங்கள்கிழமை அதிகாலையிலேயே ஊடகங்களை சந்திக்க தயாரானார். "பிபிசி ஃபைவ் லைவ்' வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் என்னை இன்னும் பெரிய அளவில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்பேன்.

    எதிர்காலத்தில் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக்கூட என்னால் வெல்ல முடியாமல் போகலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. எனினும் என்னால் முடிந்த அளவுக்கு கடுமையாகப் போராடி வெற்றி பெற முயற்சிப்பேன். மற்ற போட்டியாளர்கள் (வீரர்கள்) பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டேன்.

    அடுத்த சில நாள்கள் ஓய்வெடுக்கப் போகிறேன். அதன்பிறகு என் குடும்பத்தினருடன் உணவருந்த வேண்டும். பின்னர் நண்பர்களை சந்திக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மீண்டும் தீவிரமாக டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடவிருக்கிறேன்.

    நான் பட்டம் வென்றதை எனது குடும்பத்தினராலும், என்னாலும் நம்ப முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் விழித்திருந்த நான், எனது நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தேன்.

    செய்தித் தாள்களின் முதல் பக்கத்திலும், கடைசிப் பக்கத்திலும் நான் விம்பிள்டனில் பட்டம் வென்ற செய்தி வெளியாகியிருக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்றார்.

    சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிப்பதுதான் உங்களின் அதிகபட்ச லட்சியமா என்று கேட்டபோது, "அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், அதையே நினைத்துக் கொண்டு இருக்கமாட்டேன். அது மிகக் கடினமானதாகும். அதற்கு நீங்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும்.

    இப்போதைக்கு நான் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளேன்.

    இப்போது தரவரிசையில் முதலிடத்துக்கு மிக அருகில் (2-வது இடம்) உள்ளேன். அடுத்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும், மற்ற போட்டிகளிலும் நிறைய சாம்பியன் பட்டங்கள் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. தரவரிசையைப் பற்றி கவலைப்படவில்லை' என்றார்.

    விம்பிள்டன் விருந்தில் பிரான்ஸின் மரியோன் பர்டோலி, பிரிட்டனின் ஆன்டி முர்ரே.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai