Enable Javscript for better performance
டென்னிஸ் தரவரிசை: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் ஃபெடரர்- Dinamani

சுடச்சுட

    
    roger-federer

    சர்வதேச ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    கடந்த 10 ஆண்டுகளில் ரோஜர் ஃபெடரர் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது இதுவே முதல்முறையாகும். 2003-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஃபெடரர் 5-வது இடத்தில் இருந்தார். அடுத்த சில நாள்களில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக பட்டம் வென்ற ஃபெடரர், அதன்பிறகு தரவரிசையில் ஏற்றம் கண்டார்.

    அதைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தரவரிசையில் முதல் 3 அல்லது 4 இடங்களுக்குள்தான் ஃபெடரர் இருந்தார். சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னர் 3-வது இடத்தில் இருந்த ஃபெடரர், அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டதன் மூலம் இப்போது 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

    விம்பிள்டன் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டபோதும் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். விம்பிள்டன் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2-வது இடத்தில் உள்ளார். ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு ஸ்பெயின் வீரரான ரஃபேல் நடால் 5-வது இடத்தில் இருந்து தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    7-வது இடத்தில் பர்டோலி: மகளிர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில், விம்பிள்டனில் 4-வது சுற்றோடு வெளியேறியபோதும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

    விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸின் மரியோன் பர்டோலி, 15-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    போபண்ணா முன்னேற்றம்: இந்தியாவின் ரோஹன் போபண்ணா ஆடவர் இரட்டையர் தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும்.

    விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் பிரான்ஸின் ரோஜர் வேஸலினுடன் இணைந்து விளையாடிய போபண்ணா, அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai