விம்பிள்டன்: கலப்பு இரட்டையரில் நெஸ்டர்-மடிநோவிக் ஜோடி சாம்பியன்
By dn | Published on : 09th July 2013 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் கனடாவின் டேனியல் நெஸ்டர்-பிரான்ஸின் கிறிஸ்டினா மடிநோவிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் நெஸ்டர்-மடிநோவக் ஜோடி 5-7, 6-2, 8-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் புருனோ சோயர்ஸ்-ஆஸ்திரேலியாவின் லிசா ரேமண்ட் ஜோடியை வீழ்த்தியது.
40 வயதான டேனியல் நெஸ்டர், இரட்டையர் பிரிவில் வென்ற 11-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. விம்பிள்டனில் 3-வது பட்டம் வென்றுள்ள நெஸ்டருக்கு, கலப்பு இரட்டையர் பிரிவிலும் இது 3-வது பட்டமாகும்.
அதேநேரத்தில் 20 வயதாகும் மடிநோவிக், முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
போட்டிக்குப் பிறகு நெஸ்டர் கூறுகையில், "ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் முடிந்ததும், ரசிகர்கள் அனைவரும் இங்கிருந்து சென்றுவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். எனினும் சில ரசிகர்கள் இங்கு அமர்ந்து எங்களின் ஆட்டத்தை ரசித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
என்னுடன் இணைந்து விளையாடிய மடிநோவிக் எதிர்காலத்தில் சிறந்த ஒற்றையர் வீராங்கனையாக வருவார்.
இப்போது அவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்று வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் விரைவில் ஒற்றையர் பிரிவு போட்டியில் களமிறங்குவார் என்று என்று நினைக்கிறேன். சரியான நேரத்தில் மடிநோவிக்குடன் ஜோடி சேர்ந்துள்ளேன்' என்றார்.
மடிநோவிக் கூறுகையில், "நெஸ்டருடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் இரட்டையர் பிரிவில் பெரிய வீரர்.
எல்லா போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ள அவருடன் இணைந்து விளையாடியதை கெüரவமாக நினைக்கிறேன்' என்றார்.