Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    ashes

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை இப்போட்டி நடைபெற உள்ளது.

    ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறும் இப்போட்டியை பல்வேறு நாட்டு ரசிகர்கள் கண்டு களிக்க உள்ளனர்.

    ஆஷஸ் தொடர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்டவை. இத்தொடர் முதன்முதலாக 1882-ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல், முறையே 18 மற்றும் 30 மாதங்கள் இடைவெளிக்குப் பின் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் இரு நாடுகளிலும் மாறி மாறி நடைபெறும்.

    கடைசியாக, 2010-11-ம் ஆண்டுகளில் இத்தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 30 மாதங்களுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டில் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இத்தொடரில் வெற்றி பெறுவது, விளையாட்டுக்கு அப்பால் மிகவும் கெüரவமாகப் பார்க்கப்படுகிறது. அதனால் ஆஷஸ் தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் பல்வேறு யுத்திகளை கையாண்டு தங்கள் நாட்டு ரசிகர்களை கெüரவப்படுத்த முயல்வர்.

    முதல் டெஸ்ட்: இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இப்போட்டி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடைசியாக நடைபெற்ற இரு ஆஷஸ் தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. எனவே இம்முறையும் கோப்பையைக் கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றி பெற அந்த அணி வீரர்கள் போராடுவர்.

    அதற்குத் தகுந்தாற்போல் அந்த அணி பலமுடனே காட்சியளிக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மினி உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவி 2-ம் இடத்தைப் பிடித்தது. அத்தொடரில் அந்த அணியின் பந்து வீச்சு மற்றும்

    பேட்டிங் சிறப்பாக இருந்தது.

    கேப்டன் குக், இயான் பெல், கெவின் பீட்டர்சன், பிரையர் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கிலும், ஆண்டர்சன், ஃபின், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிரேம் ஸ்வான் ஆகியோர் பந்து வீச்சிலும் எதிரணிக்கு கடும் சவால் அளிக்க காத்துள்ளனர்.

    நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணி, உள்ளூரில் சாதகமன சூழலில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

    அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தனது பழைய நிலைக்குத் திரும்ப கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. அணியில் டெஸ்ட் போட்டிக்கென தகுதியுடைய முன்னணி வீரர்கள் யாரும் இல்லாததும், அந்த இடம் நிரப்பப்படாத வெற்றிடமாக இருப்பதும் அந்த அணிக்குப் பெரும் பின்னடைவு.

    சமீபத்தில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, அணியில் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது. சமீபத்திய தொடர்களில் பேட்டிங்கில் கேப்டன் கிளார்க்கைத் தவிர யாரும் ஜொலிக்கவில்லை. அவரும் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

    வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்ட ஆஸ்திரேலிய அணியில், எதிரணி வீரர்களின் பலவீனங்களை அறிந்து பந்து வீசுவதும் முக்கியம். பீட்டர் சிடில், பட்டின்சன் ஆகியோரை நம்பி அந்த அணி உள்ளது. சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியில், சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் தடுமாறி வருகிறது. இத்தொடரில் வெற்றி பெற்று இழந்த பெருமையை மீட்க ஆஸ்திரேலிய அணி முயற்சிக்கும்.

    கடைசியாக நடைபெற்ற 5 தொடர்களின் விவரம்

    ஆண்டு இடம் வெற்றி தொடர்நாயகன்

    2010/11 ஆஸ்திரேலியா இங்கிலாந்து 3-1 அலாஸ்டர் குக்

    2009 இங்கிலாந்து இங்கிலாந்து 2-1 ஆண்ட்ரூ ஸ்டிராஸ், மைக்கேல் கிளார்க்

    2006/07 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா 5-0 ரிக்கி பாண்டிங்

    2005 இங்கிலாந்து இங்கிலாந்து 2-1 ஃபிளின்டாப்

    2002/03 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா 4-1 மைக்கேல் வாகன்

    ஆஷஸ் தொடர் சமநிலை அடையும் பட்சத்தில்,  முந்தைய தொடரை வென்றிருந்த அணிக்கு கோப்பை அளிக்கப்படும்.

    ஆஸி. முன்னிலை

    இரு அணிகளும் இதுவரை நடைபெற்ற ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி அதிக தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. அதேபோல், இத்தொடரில் அதிக போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது.

    தொடர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து டிரா

    66 31 30 5

    டெஸ்ட் ஆஸ்திரேலியா இங்கிலாந்து டிரா

    310 123 100 87

    இத்தொடரில்...

    அதிக ரன்கள் : டான் பிராட்மேன் 5028

    அதிக சதம் : டான் பிராட்மேன் 19

    அதிக விக்கெட்டுகள் : ஷேன் வார்னே 195

    அதிகபட்ச ரன் : லியனார்டு ஹட்டன் 364

    சிறந்த பந்து வீச்சு : ஜிம் லேகர் 10வி/53

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai