Enable Javscript for better performance
இறுதி ஆட்டத்தில் இந்தியா- Dinamani

சுடச்சுட

    
    bhuvanesh

    முத்தரப்புத் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தியா.

    முதலில் பேட் செய்த இந்தியா 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இலங்கை 24.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது.

    டிரினிடாட் அன்ட் டொபாகோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ், இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

    மழையால் பாதிப்பு: இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. 52 பந்துகளைச் சந்தித்த கோலி 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் நடையைக் கட்ட, ரெய்னா களம்புகுந்தார். இந்திய 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது ரோஹித் சர்மா 83 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 48, ரெய்னா 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இலங்கை தோல்வி: இதன்பிறகு டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இலங்கைக்கு 26 ஓவர்களில் 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாட வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சண்டிமால் 26 ரன்கள் எடுத்தார்.

    மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 24.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு சுருண்டது.

    இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார் 6 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த ஆட்டத்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்தியா போனஸ் புள்ளியோடு சேர்த்து 5 புள்ளிகளைப் பெற்றது. இதன்மூலம் மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளும் தலா 9 புள்ளிகளுடன் இருந்தபோதும், ரன் அடிப்படையில் இலங்கை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, போட்டியிலிருந்து வெளியேறியது.

     

    போட்டித் துளிகள்...

    * புவனேஸ்வர் குமார் 2-வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    * இந்த ஆட்டத்தில் 8 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே புவனேஸ்வர் குமாரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும். இதுதான் மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் இந்திய பெüலர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

    * போர்ட் ஆஃப் ஸ்பெயினில் தொடர்ச்சியாக 4 ஒருநாள் ஆட்டங்களில் வாகை சூடியுள்ளது இந்தியா.

    * ஷிகர் தவனை கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 200-வது கேட்ச்சை பதிவு செய்தார் ஜெயவர்த்தனா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai