ஆகஸ்ட் 25-ல் ஐஓஏ சிறப்பு பொதுக்குழு கூட்டம்
By dn | Published on : 12th July 2013 05:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறுகிறது.
விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவதற்கான தேதியை இறுதி செய்வதற்காக ஐஓஏவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஓஏவின் தலைவர் அபய் சிங் செüதாலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட ஐஓஏ உறுப்பினர்களும், 30-க்கும் மேற்பட்ட தேசிய விளையாட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாநில ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அதில் ஐஓஏ விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு பொதுக்குழுவை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் செப்டம்பர் 22-ம் தேதி ஐஓஏ நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. எனினும் செப்டம்பர் 22 என்பது, உத்தேச தேதி மட்டுமே என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பு சங்கங்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அபய் சிங் செüதாலா தெரிவித்தார்.
தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த டிசம்பரில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி).
இதையடுத்து ஐஓஏவின் சஸ்பெண்டை நீக்குவது தொடர்பாக ஐஓசி கூட்டுக்கூட்டம், ஸ்விட்சர்லாந்தின் லாசனில் கடந்த மே மாதம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான சிறப்பு பொதுக்குழுவை ஜூலை 15-ம் தேதி கூட்டுமாறும், செப்டம்பர் 1-ம் தேதிக்குள் மறுதேர்தலை நடத்துமாறும் ஐஓசி உத்தவிட்டது.
இதையடுத்து விதிமுறைகளில் திருத்தம் செய்வது தொடர்பான விவரங்களை ஐஓசியிடம் அளித்தது ஐஓஏ.
ஆனால் அதை முழுமையாக ஆராய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், ஆகஸ்ட் 22 முதல் 28-க்குள் சிறப்பு பொதுக்குழுவை கூட்டுமாறு ஐஓசி உத்தரவிட்டது. இதையடுத்து இப்போது ஆகஸ்ட் 25-ம் தேதி ஐஓஏவின் சிறப்பு பொதுக்குழு கூடவுள்ளது.