Enable Javscript for better performance
இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு

    By dn  |   Published on : 12th July 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் (சிஏ) தலைமைச் செயல் அதிகாரியாக ஹாரூன் லோர்கட்டை நியமிப்பதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதனால் வரும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ள இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்காக 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் ஒருவர் ஐசிசியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான ஹாரூன் லோர்கட்.

    இவர், நிர்வாகத் துறையில் அதிக அனுபவம் கொண்டவர் என்பதால், புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் லோர்கட்டை தலைமைச் செயல் அதிகாரியாக நியமிப்பதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அவர், ஐசிசியில் பணிபுரிந்தபோது, அவருக்கும், பிசிசிஐக்கும் இடையே நல்ல உறவு இல்லை. அதனாலேயே பிசிசிஐ எதிர்ப்பு தெரிவிக்கிறது என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தலைமைச் செயல் அதிகாரியாக லோர்கட் நியமிக்கப்பட்டால், நவம்பரில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் விளையாட வரமாட்டோம் என பிசிசிஐ தரப்பு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தனி இயக்குநர் நார்மனும் உறுதி செய்துள்ளார்.

    அதேநேரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். பிசிசிஐயின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறுகையில், "தலைமைச் செயல் அதிகாரியாக லோர்கட்டை தேர்வு செய்யாவிட்டால், தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி செல்லும்' என்றார்.

    இதேபோல் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்பான அட்டவணையை பிசிசிஐயிடம் கலந்தாலோசிக்காமல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டதால், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் 7 ஒருநாள் போட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai