Enable Javscript for better performance
இலங்கையை வீழ்த்தினார் தோனி- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா.

    கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 4 பந்துகளில் 2 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசி "த்ரில்' வெற்றியைத் தேடித்தந்தார் கேப்டன் தோனி.

    முதலில் பேட் செய்த இலங்கை 48.5 ஓவர்களில் 201 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா 49.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து "த்ரில்' வெற்றி கண்டது.

    சுருண்டது இலங்கை: டிரினிடாட் அன்ட் டொபாகோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 48.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக சங்ககாரா 71 ரன்களும், திரிமானி 46 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ரோஹித் அரைசதம்: 202 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியும், தொடக்கத்தில் இலங்கையைப் போலவே தடுமாற்றம் கண்டது. ஷிகர் தவன் 16 ரன்களிலும், விராட் கோலி 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. 37 பந்துகளைச் சந்தித்த கார்த்திக் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரெய்னா, அதிரடியாக ரன் சேர்த்தார். இதனால் இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்தது. இந்தியா 139 ரன்களை எட்டியபோது ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 89 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார். ரோஹித்-ரெய்னா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 8.1 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தது.

    சரிவுக்குள்ளான இந்தியா: இதன்பிறகு தோனி களம்புகுந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரெய்னா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 5 ரன்களிலும், அஸ்வின் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். அப்போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

    இதன் பிறகு வந்த புவனேஸ்வர் குமார், விக்கெட்டை காப்பாற்றுவதிலேயே குறியாக செயல்பட்டார். இதனால் அவர், 15 பந்துகளைச் சந்தித்தபோதும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதேநேரத்தில் கேப்டன் தோனி மெதுவாக ரன் சேர்த்தார்.

    தோனி விளாசல்: பின்னர் வந்த வினய் குமார் 5 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டுக்கு தோனியுடன் இணைந்தார் இஷாந்த் சர்மா. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 22 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டன. இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியதால், கடைசி ஓவர்களில் 15 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இலங்கையின் எரங்கா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை தோனி வீணடிக்க, ஆட்டம் மேலும் பரபரப்பானது. எனினும் 2-வது பந்தை சிக்ஸருக்கு விரட்டிய தோனி, 3-வது பந்தில் பவுண்டரியையும், 4-வது பந்தில் சிக்ஸரையும் விளாச, இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

    தோனி 52 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், இஷாந்த் சர்மா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    வெங்சர்க்கார் புகழாரம்!

    நான் பார்த்தவர்களில் தோனியே சிறந்த மேட்ச் "ஃபினிஸர்' (ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் ஆற்றல் கொண்டவர்) என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,"தொடக்க ஆட்டங்களில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி, கடும் போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி மீண்டும் கோப்பையை வென்றது மிகப்பெரிய விஷயமாகும்.

    தோனி, உணர்ச்சி வசப்படாத குணம் கொண்டவர். நான் பார்த்தவர்களில் போட்டியை வெற்றியில் முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களில் தோனிதான் சிறந்தவர்' என்றார்.

    ஜெயவர்த்தனாவுக்கு 400-வது போட்டி

    இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டம் இலங்கை வீரர் ஜெயவர்த்தனாவுக்கு 400-வது ஒருநாள் போட்டியாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் 400 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 3-வது வீரர், 2-வது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மஹேல ஜெயவர்த்தனா. இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (463 போட்டிகள்), இலங்கையின் சனத் ஜயசூர்யா (445 போட்டிகள்) ஆகியோர் 400 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய மற்ற வீரர்கள் ஆவர்.

    இந்தியாவுக்கு எதிராக மட்டும் ஜெயவர்த்தனா 2,436 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் முதல் 5-வது வீரர் வரையிலான நிலைகளில் களமிறங்கி சதமடித்த ஒரே இலங்கை வீரர் ஜெயவர்த்தனா மட்டுமே.

    தொடர் நாயகன் புவனேஸ்வர்

    முத்தரப்புத் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து, தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

    முதல் முறையாக தொடர்நாயகன் விருதை வென்ற புவனேஸ்வர் குமார், ஒருநாள் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 4 மெய்டன்களை வீசிய 3-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கபில்தேவ், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஓர் இன்னிங்ஸில் தலா 4 மெய்டன்களை வீழ்த்திய மற்ற இந்தியர்கள் ஆவர்.

    இந்தியா தொடர்ந்து "நம்பர் 1'

    ஒருநாள் போட்டித் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    ஐசிசியின் வருடாந்திர தரவரிசை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்புத் தொடர் ஆகியவற்றில் அடுத்தடுத்து கோப்பையை வென்ற இந்தியா 122 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா (114) 2-வது இடத்திலும், இங்கிலாந்து (112) 3-வது இடத்திலும் உள்ளன.

    போட்டித் துளிகள்...

    * இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்புத் தொடர் என 3 ஒருநாள் தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

    * இந்த ஆண்டில் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார்.

    * இலங்கைக்கு எதிராக 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இதுவரை 2,086 ரன்கள் குவித்துள்ளார். அவரின் சராசரி 61.35 ஆகும்.

    * இலங்கைக்கு எதிராக 57 ஆட்டங்களில் விளையாடியுள்ள தோனி, 59 கேட்ச், 19 ஸ்டம்பிங் என மொத்தம் 78 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதன்மூலம் இந்தியா-இலங்கை இடையிலான ஆட்டங்களில் 75-க்கும் மேற்பட்டோரை ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

    இந்திய வீரர்கள் நெகிழ்ச்சி

    சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்புத் தொடர் ஆகியவற்றில் அடுத்தடுத்து வாகை சூடியுள்ள இந்திய வீரர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

     

    கடந்த 2 மாதங்கள் சிறப்பாக அமைந்தது. 2 கோப்பைகளுடன் நாடு திரும்புகிறோம். ரசிகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி.

    - ஷிகர் தவன்

     

    இக்கட்டான நேரத்தில் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்துள்ள தோனிக்கு பாராட்டுகள். என்னவொரு வெற்றி! தோனி, என்ன ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மிகச் சிறப்பாக ஆட்டத்தை முடித்துள்ளார்.

    - அஸ்வின்

     

    இலங்கைக்கு எதிரான வெற்றி அற்புதமானது. இரு கோப்பைகளுடன் விமானத்தில் பறக்கப் போகிறோம். நாங்கள்தான் சாம்பியன். ஜெய் ஹிந்த்!

    - ஜடேஜா

     

    என்னவொரு வெற்றி! தான் ஒரு கதாநாயகன் என்பதை தோனி மீண்டும் நிரூபித்துள்ளார்.

    - ரெய்னா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai