Enable Javscript for better performance
ராசிபுரத்தில் மாநில பால் பாட்மிண்டன் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    spts

    மாநில அளவிலான சப்-ஜூனியர் பால் பாட்மிண்டன் போட்டி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

    இரு நாள்கள் நடைபெறும் 16 வயதுக்குட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் 32 அணிகள், மகளிர் பிரிவில் 20 அணிகள் என தமிழகத்தின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 52 அணிகள் பங்கேற்றுள்ளன.

    தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கம் - நாமக்கல் மாவட்ட பால் பாட்மிண்டன் சங்கம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. போட்டியின் தொடக்க விழாவுக்கு ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கை நடராஜன், முதல்வர் கே.கே.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் எம்.பரவசிவம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

    தொடக்க ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் திண்டுக்கல் அணி 29-4, 29-9 என்ற புள்ளிகள் கணக்கில் விழுப்புரம் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் திருப்பூர் அணி 29-25, 29-14 என்ற கணக்கில் நாமக்கல் அணியை வென்றது. கோவை - தூத்துக்குடி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 29-12, 29-15 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் சேலம் அணி 29-11, 29-14 என்ற புள்ளிகள் கணக்கில் விருதுநகர் அணியை வென்றது.

    மகளிர் பிரிவு ஆட்டத்தில் நாமக்கல் 29-18, 29-9 என்ற கணக்கில் கரூர் அணியை வென்றது. சென்னை அணி 29-2, 29-1 என்ற புள்ளிகள் கணக்கில் விருதுநகர் அணியை வென்றது. கிருஷ்ணகிரி அணி 29-5, 29-16 என்ற கணக்கில் திருப்பூர் அணியை வீழ்த்தியது. நாகை அணி 29-3, 29-6 என்ற கணக்கில் காஞ்சிபுரம் அணியையும், மதுரை அணி 29-1, 29-0 என்ற கணக்கில் கரூர் அணியையும் வென்றன.

    முன்னதாக நடைபெற்ற போட்டியின் தொடக்க விழாவில், தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai