Enable Javscript for better performance
வீரர்களின் தவறான செயல்களால் கிரிக்கெட்டுக்கு அவமரியாதை- Dinamani

சுடச்சுட

    

    வீரர்களின் தவறான செயல்களால் கிரிக்கெட்டுக்கு அவமரியாதை

    By dn  |   Published on : 14th July 2013 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bishan

    கிரிக்கெட் வீரர்கள் தங்களின் சட்ட விரோதமான மற்றும் நியாயமற்ற செயல்களால் கிரிக்கெட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர் என்று முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பல்கிவாலா பவுண்டேசன் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஷன் சிங் பேடி, "கிரிக்கெட் அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறதா?' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கிரிக்கெட் போட்டி உயர்வு, நேர்மை உள்ளிட்ட விஷயங்களோடு தொடர்புடையதாகும். அப்படிப்பட்ட விளையாட்டுக்கு கிரிக்கெட் வீரர்கள் தங்களின் சட்ட விரோதமான மற்றும் நியாயமற்ற செயல்களால் அவப்பெயரை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இதுபோன்ற வீரர்களால் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

    முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டக்ளஸ் ஜார்டினின் "பாடிலைன்' உத்தியை நினைவுகூர்ந்த பிஷன் சிங், "ஜார்டின், பேட்ஸ்மேனுக்கு பின்னால் 7 பீல்டர்களை நிற்க வைத்தார். இந்த உத்தியும் கிரிக்கெட் வீரரான ஒருவரால்தான் கொண்டு வரப்பட்டது.

    எனினும் பின்னாளில் "பாடிலைன்' உத்திக்கு தடை விதிக்கப்பட்டது. எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்காக பந்தை சேதப்படுத்தும் முறையும் வீரர்களால்தான் கொண்டு வரப்பட்டது. அதனால்தான் இப்போது விக்கெட் எடுத்த பிறகு பந்தை நடுவரிடம் கொடுக்கிறார்கள்' என்றார்.

    கிரிக்கெட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதற்கு வீரர்களே காரணம் என்று குற்றம்சாட்டிய பிஷன் சிங், "ஆடுகளத்தின் நீளம், பந்தின் எடை, ஸ்டெம்பின் உயரம் ஆகியவற்றில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

    அதேநேரத்தில் கிரிக்கெட்டின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் நடனம், கூத்து என பல்வேறு விஷயங்கள் இப்போது நடக்கின்றன.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, பொழுதுபோக்கான விஷயமாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மக்களை மனஅழுத்தத்தில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்காகத்தான் கிரிக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கிரிக்கெட் போட்டியில் நடனம் போன்ற கூடுதல் பொழுது போக்குகளை புகுத்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் போட்டி நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என்று நான் திட்டவட்டமாக நினைக்கிறேன். அது விரைவில் இளைஞர்களுக்கு திகட்டலை கொடுத்துவிடும்' என்றார்.

    டான் பிராட்மேனுடன் நட்புறவு கொண்டிருந்ததை நினைவுகூர்ந்த பிஷன் சிங், "டான் பிராட்மேன், ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னை ஒரு நேர்மையாளனாக மற்றவர்கள் நினைவுகூர வேண்டும் என்று கூறியிருந்ததை மேற்கோள் காட்டிப் பேசினார்.

    அப்போது, "சிறந்த கிரிக்கெட் வீரர், கிரிக்கெட்டின் சிறந்த மாணவர் ஆவார். சிறந்த நிர்வாகி கிரிக்கெட்டின் சிறந்த பணியாளர் ஆவார். ஆனால் அவர் கிரிக்கெட்டின் முதலாளி கிடையாது. ஏனென்றால் இங்கு கிரிக்கெட்தான் முதலாளி' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai