Enable Javscript for better performance
அப்ரிதி அபாரம் - 7வி/12; பாகிஸ்தான் அபார வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    AFRIDI

    பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதியின் அதிரடியான ஆட்டம் மற்றும் சுழல் பந்து வீச்சால் மேற்கிந்தியத் தீவுகள் அணி படு தோல்வியடைந்தது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள கயானாவில் இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக நசீர் ஜம்ஷெட்டும், அகமது ஷேஸத்தும் களமிறங்கினர்.

    எதிரணி வீரர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர்.

    ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின், கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் அப்ரிதியும் அணியை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது.

    மிஸ்பா மெதுவாக ஆட, அப்ரிதியோ அதிரடியாக விளாச ஆரம்பித்தார். பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் சென்ற வண்ணம் இருந்தன.

    30 பந்துகளில் 50 ரன்கள்: அதனால் 30 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அப்ரிதி அரை சதமடித்தார். தொடர்ந்து தனது இயற்கையான ஆட்டத்தை அவர் விளையாடினார்.

    அணியின் ஸ்கோர் 167-க உயர்ந்தபோது 76 ரன்களில் அப்ரிதி ஆட்டமிழந்தார். 55 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்களை எடுத்தார். மிஸ்பா உல் ஹக் 52 ரன்களில் வெளியேறினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

    மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    அப்ரிதிக்கு 7 விக்கெட்டுகள்: பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானை விட பேட்டிங்கில் தடுமாறியது. 7 ரன்களுக்குள் அந்த அணி சார்லஸ் (0), கெயில் (1), பிராவோ (5) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது.

    இவர்களில் கெயில் ரன் அவுட்டானார். மற்ற இருவரும் முகமது இர்ஃபான் பந்து வீச்சில் வெளியேறினர். அதன் பிறகு அப்ரிதியின் சுழற்பந்து வீச்சு ஆரம்பமானது.

    அவரது சுழலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர்.

    அதனால் அந்த அணி 25.4 ஓவரில்தான் 50 ரன்களைக் கடந்தது. இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 41 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படு தோல்வியைத் தழுவியது.

    9 ஓவர்கள் பந்து வீசிய அப்ரிதி 12 ரன்களை மட்டும் அளித்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    இதில் 3 ஓவர்கள் மெய்டன்களாகும். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

     

    ஆட்ட நாயகன் அப்ரிதி
    அதிரடி வீரர் என்று வர்ணிக்கப்படும் அப்ரிதி நீண்ட காலமாக தடுமாறி வந்தார். இதனால் முக்கியமான போட்டிகளில் இருந்து கழற்றி விடப்பட்டார். தற்போது மீண்டும் பழைய அதிரடிக்குத் திரும்பி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 12 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அப்ரிதி. இது ஒரு பாகிஸ்தான் வீரரின் சிறந்த பட்சமாகும்.

    இது குறித்து அப்ரிதி கூறுகையில், "கடினமான முயற்சிக்குப் பிறகு தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு தற்போது தகுந்த நேரமில்லை. அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிப்பதே எனது நோக்கம்' என்று தெரிவித்தார்.

     

    சுருக்கமான ஸ்கோர்
    பாகிஸ்தான்-224/9

    (அப்ரிதி 76,மிஸ்பா 52,

    ஹோல்டர் 4வி/13)

    மேற்கிந்தியத் தீவுகள்- 98

    (சாமுவேல்ஸ் 25, சாமி 21*,

    அப்ரிதி 7வி/12)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai