Enable Javscript for better performance
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை- Dinamani

சுடச்சுட

    

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது. இப்போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது. நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையால், போட்டியின் முடிவு இங்கிலாந்துக்கு சாதகமானது.

    இம்முறையை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

    இருப்பினும், இரு அணி வீரர்களின் செயல்பாடுகளை ஒப்பிடுகையில் இங்கிலாந்து அணியின் கூட்டு முயற்சி இந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அதே அணி, 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படும் என்று அந்நாட்டு அணித் தேர்வாளர் ஜியோஃப் மில்லர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த ஆட்டம் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது.

    ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கியுள்ள இங்கிலாந்து அணிக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

     

    பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும்: லீமென்

    ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பயிற்சியாளர் டேரன் லீமென் தெரிவித்துள்ளார்.

    ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவி, 0-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா பின்தங்கியது. இந்த ஆட்டத்தில் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியது ஆஸ்திரேலிய அணி தோற்றதற்கு முக்கியக் காரணம். இதைக் கருதியே லீமேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    "முதல் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினர். பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதே முக்கியம். கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 64 ஓவர்களையும், 2-வது இன்னிங்ஸில் 110 ஓவர்களை மட்டுமே நம்மால் விளையாட முடிந்தது. முதல் இன்னிங்ஸில் 120 ஓவர் அல்லது அதற்கு மேல் பேட் செய்து ரன் குவிப்பது முக்கியம்' என்று லீமென் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai