Enable Javscript for better performance
டி.ஆர்.எஸ். விவகாரம் பொறுத்திருந்து பார்ப்போம்- Dinamani

சுடச்சுட

    
    jamula

    டி.ஆர்.எஸ். விவகாரத்தில் தற்போது நிகழ்ந்துள்ள தவறு அடுத்து நடைபெறும் போட்டிகளில் மீண்டும் நடக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் போமி ஜமுலா தெரிவித்துள்ளார்.

    ஐசிசி நடுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் 5 நாள் கூட்டம் நாகபுரியில் புதன்கிழமை தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக வந்துள்ள ஜமுலா மேலும் கூறியது:

    நடுவர்களின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் முறை (டிஆர்எஸ்) தொழில்நுட்ப விஷயங்களைச் சார்ந்தவையாக உள்ளது. தொழில்நுட்பங்கள், பெரும்பாலான நேரங்களில் துல்லியமாகவே செயல்படுகின்றன. அதில் எப்போதாவது தவறு நடக்கும்.

    நாம் பயன்படுத்தும் காரை எடுத்துக் கொள்வோம், அது பெரும்பாலான நேரங்களில் சரியாகவே இயங்குகிறது. எப்போதாவது பழுதாகிறது என்பதற்காக காரை பயன்படுத்துவதை நிறுத்திவிட முடியுமா?

    எனவே இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த அதே தவறு, அடுத்து வரும் போட்டிகளில் மீண்டும் நடக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    நடுவர்களுக்கு உதவக்கூடிய வகையில் நல்ல தொழில்நுட்பங்களாக இருந்தால், அதை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம். நடுவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எல்லோருக்கும் ஆங்கிலம் தாய்மொழியாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி, தாய்மொழியாக இருக்கும். அதனால் அவர்கள் இடையே தகவல் தொடர்பு பிரச்னை ஏற்படலாம். அதன் காரணமாக அவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களுக்கு தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து நல்ல பயிற்சியளிப்பது முக்கியம் என்றார்.

    இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், ஆண்டர்சன் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். நடுவர் அவுட் கொடுக்க மறுக்கவே, ஆஸ்திரேலிய அணி, டிஆர்எஸ் முறை மூலம் 3-வது நடுவரை அணுகியது. அப்போது பந்து பேட்டில் படவில்லை என ரீபிளேயில் தெரிந்தாலும், ஹேடினின் பேட்டை, பந்து கடந்து செல்லும்போது பேட்டில் பட்டது போன்ற சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai