திருச்சியில் காவல்துறை மண்டலங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
By dn | Published on : 16th July 2013 11:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தமிழக காவல்துறை மண்டலங்களுக்கிடையிலான 53-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
திருச்சி மத்திய மண்டலம், மதுரை தெற்கு, கோவை மேற்கு, வேலூர் வடக்கு, ஆயுதப்படை, சென்னை மாநகர காவல்துறை, ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 7 மண்டலங்களைச் சேர்ந்த காவல்துறையினர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆடவர் பிரிவில் கபடி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால் போட்டிகளும், மகளிர் பிரிவில் கபடி, கூடைப்பந்து, வாலிபால், பாட்மிண்டன் ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றன.
முதல்நாள் நடைபெற்ற லீக் மற்றும் காலிறுதிப் போட்டிகளில் வென்ற அணிகள் விவரம்:
கபடி - மத்திய மண்டலம் மற்றும் ஆயுதப்படை, வாலிபால் - மத்திய மண்டலம், கமாண்டோ படை மற்றும் தெற்கு மண்டலம், கூடைப்பந்து - ஆயுதப்படை, தெற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஹாக்கி - சென்னை மாநகரக் காவல்துறை, ஹேண்ட் பால் - மத்திய மண்டலம் மற்றும் சென்னை மாநகரக் காவல்துறை, கால்பந்து - சென்னை மாநகர காவல்துறை, பாட்மிண்டன் - சென்னை மாநகரக் காவல்துறை - பி அணி, ஆயுதப்படை - பி அணி, மத்திய மண்டலம் - ஏ அணி ஆகியவை வெற்றி பெற்றன.
மகளிர் பிரிவில் கூடைப்பந்து போட்டியில் சென்னை மாநகரக் காவல்துறை மற்றும் ஆயுதப்படை அணிகள் வெற்றி பெற்றன. இந்தப் போட்டிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் நடைபெறவுள்ளன.
முன்னதாக, இந்தப் போட்டிகளை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. எம். ராமசுப்பிரமணி தலைமையில், மாநகரக் காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தொடக்கி வைத்தார்.