Enable Javscript for better performance
2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    spt2

    ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

    டிஆர்எஸ் பிரச்னை, நடுவர்களின் தவறான முடிவுகள் என பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில்தான் இங்கிலாந்து வெற்றி கண்டது.

    எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, மிகுந்த எச்சரிக்கையோடு ஆஸ்திரேலியாவை சந்திக்கும். அதேநேரத்தில் முதல் டெஸ்டில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு போராடும்.

    இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் குக், ஜோ ரூட், டிராட், பீட்டர்சன், இயான் பெல் என பலம் வாய்ந்த பேட்டிங்கைக் கொண்டிருந்தாலும், கடந்த போட்டியில் பெல் மட்டுமே சதமடித்தார். எனினும் அந்த அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது.

    அதேநேரத்தில் பந்துவீச்சாளர்களில் ஸ்டீவன் ஃபின் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர் நீக்கப்படும் பட்சத்தில் டிம் பிரெஸ்னன் அல்லது கிரஹாம் ஆனியனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    ஆஸ்திரேலிய அணியில் எட் கோவனுக்குப் பதிலாக உஸ்மான் கவாஜா சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய எட்கோவன், முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக ஜாக்சன் பேர்ட், ஆடும் லெவனில் சேர்க்கப்படலாம். ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும், தொடக்க வீரர் வாட்சனும் இரு துருவங்களாக செயல்பட்டு வருவதாகவும், வாட்சனை ஆஸ்திரேலிய அணியின் "புற்றுநோய்' என கேப்டன் கிளார்க் கூறியதாகவும் சமீபத்தில் நீக்கப்பட்ட பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் சோதனையான கட்டத்தைத் தாண்டி இந்தப் போட்டியில் வாகை சூட வேண்டிய கட்டாயத்தில் களம் காண்கிறது ஆஸ்திரேலியா.

    இங்கிலாந்தின் பலம்...

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் இயான் பெல், முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடாதபோதிலும், 2-வது இன்னிங்ஸில் சதமடித்ததோடு, ஸ்டூவர்ட் பிராடுடன் இணைந்து இங்கிலாந்து வலுவான முன்னிலை பெற உதவினார். பெல், இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு பலம் சேர்ப்பதாக அமையும்.

    இங்கிலாந்தின் மிகப்பெரிய பலம் அந்த அணியின் பந்துவீச்சுதான். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிரீம் ஸ்வான் ஆகியோர் கூட்டணி அந்த அணியின் மிகப்பெரிய துருப்புச் சீட்டாக திகழ்கிறது. இவர்கள் மூவரும் தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். எனவே இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இங்கிலாந்து பெüலர்கள் சிம்மசொப்பனமாகத் திகழ்வார்கள். ஆண்டர்சன், கடந்த போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    பலவீனம்...

    முதல் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. இயான் பெல் மட்டுமே சதமடித்தார். அது தவிர பீட்டர்சன் உள்ளிட்ட 3 பேர் அரைசதம் கண்டனர்.

    ஆஸ்திரேலியாவின் கடைநிலை வீரர்களை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பெüலர்கள் தடுமாறி வருகின்றனர். கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தபோதும், 11-வது வீரரான ஆஷ்டன் 98 ரன்கள் எடுக்கும் வரை இங்கிலாந்து பெüலர்களால் வீழ்த்த முடியாமல் போனது.

    ஆஸ்திரேலியாவின் பலம்....

    ய் கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிப்பதாக அமைந்தது. அந்த அணியின் பீட்டர் சிடில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ய் அறிமுக வீரரான ஆஷ்டன், தான் ஒரு பெüலர் மட்டுமல்ல, பேட்ஸ்மேனும்கூட என்பதை நிரூபித்தார். அவர், இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 112 ரன்கள் குவித்ததோடு, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். எனவே 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பலவீனம்...

    ய் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. முதல் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு வீழ்ந்தனர். கடைநிலை வீரர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாகவே, ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து தப்பியது.

    டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்!

    இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடைசியாக இங்கு நடைபெற்ற இரு டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி கண்டுள்ளன. நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து வெற்றி கண்டுள்ளது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 2-வதாக பேட் செய்த இங்கிலாந்து தோல்வி கண்டுள்ளது.

    லார்ட்ஸில் எலிசபெத்

    இந்தப் போட்டியை பிரிட்டன் ராணி எலிசபெத் நேரில் பார்க்கிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்கள் மற்றும் அலுவலர்களை அறிமுகம் செய்து வைக்கும் எலிசபெத், மெரில்போன் கிரிக்கெட் கிளப்பையும் பார்வையிடுகிறார்.

    அலீம்தார் இல்லை!

    கடந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடுக்கு அவுட் கொடுக்காமல் விட்டதன் மூலம் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் அலீம்தார், இந்த போட்டியில் நடுவராக செயல்படமாட்டார். அவர் வெளியில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் 3-வது நடுவராக செயல்பட்ட எராஸ்மஸ், இந்தப் போட்டியில் குமார தர்மசேனாவுடன் இணைந்து கள நடுவராக செயல்படுவார். நியூஸிலாந்தின் டோனி ஹில் 3-வது நடுவராக இருப்பார்.

    லார்ட்ஸில் இதுவரை...

    லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 1884 முதல் தற்போது வரை இங்கிலாந்து அணி 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 49 வெற்றிகளையும், 28 தோல்விகளையும் கண்டுள்ளது. 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

    ஆஸ்திரேலியாவும்-இங்கிலாந்தும் இங்கு 36 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 16 போட்டிகளில் வாகை சூடியுள்ளது. ஆனால் இங்கிலாந்து 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

    கடைசியாக இவ்விரு அணிகளும் லார்ட்ஸில் 2009 ஜூலையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடின. அதில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai