Enable Javscript for better performance
ஐபிஎல்லில் அடுத்த சர்ச்சை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் கொல்கத்தா வீரர்- Dinamani

சுடச்சுட

    

    ஐபிஎல்லில் அடுத்த சர்ச்சை: ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் கொல்கத்தா வீரர்

    By dn  |   Published on : 19th July 2013 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pradeep

    ஆறாவது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

    அவர் பயன்படுத்தியிருப்பது ஊக்கமருந்தா அல்லது தடை செய்யப்பட்ட மருந்துப் பொருளா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

    ஏற்கெனவே ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தால் திக்கு முக்காடியிருக்கும் ஐபிஎல் போட்டி அமைப்பாளர்களுக்கு, இப்போது ஊக்கமருந்து விவகாரம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிக்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பின்பும் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மேற்கொண்ட சோதனையில் பிரதீப் சங்வான் சிக்கியுள்ளார். அவரின் "ஏ' மாதிரியில் (சாம்பிள்) அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரதீப் சங்வானின் "ஏ' சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.

    பிரதீப் சங்வான் பயன்படுத்தியிருப்பது தடை செய்யப்பட்ட மருந்துப் பொருளா அல்லது ஊக்கமருந்தா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. "பி' மாதிரி சோதனை முடிவு வெளியான பிறகே அது குறித்து கண்டறிய முடியும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஊக்கமருந்து போன்ற விஷயங்களை பிசிசிஐ சகித்துக் கொள்ளாது. எனினும் தற்போதைய சூழலில் சங்வான் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தில்லியைச் சேர்ந்த 22 வயது சங்வான், 2008-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். ரஞ்சிப் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடி வரும் இவர், கடந்த இரு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய சங்வான், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. 38 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சங்வான் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் வரலாற்றில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பிடிபட்டுள்ள 2-வது வீரர் சங்வான் ஆவார். முன்னதாக 2008-ல் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சிக்கினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai