Enable Javscript for better performance
இலங்கை-தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    srilanka

    இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் சனிக்கிழமை தொடங்குகிறது.

    இலங்கைத் தலைநகர் கொழும்பில் சனிக்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி, தாற்காலிக கேப்டன் தினேஷ் சன்டிமால் தலைமையில் களம் காண்கிறது. மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின்போது இலங்கை அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், கேப்டன் மேத்யூஸýக்கு இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

    இதேபோல் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவரும் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். மற்றபடி அந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது.

    புதிய பயிற்சியாளர் ரஸல் டொமிங்கோவின் பயிற்சியின் கீழ் தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மோர்ன் மோர்கல், லான்வாபோ சோட்சோபி ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவர்கள் இருவரும் இந்த ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமே.

    முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியுள்ளது. அதேபோன்று ஒருநாள் தொடரையும் வெற்றியோடு தொடங்க தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும்.

    சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் என்பதால் இலங்கை அணியும் சிறப்பாக விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. ஒருநாள் தொடருக்குப் பிறகு, 3 இருபது ஓவர் ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் விளையாடவுள்ளன.

    அணி விவரம்

    இலங்கை: தினேஷ் சன்டிமால் (கேப்டன்), லஹிரு திரிமானி, திலகரத்னே தில்ஷான், உபுல் தரங்கா, சங்ககாரா, ஜெயவர்த்தனா, ஏஞ்ஜெலோ பெரேரா, ஜெஹன் முபாரக், ரங்கனா ஹெராத், சேனநாயக, அஜந்தா மெண்டிஸ், லசித் மலிங்கா, சமிந்தா எரங்கா, திசாரா பெரேரா, சுரங்கா லக்மல்.

    தென் ஆப்பிரிக்கா: ஏ.பி.டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஆல்விரோ பீட்டர்சன், ஃபர்ஹான் பெஹார்டியன், குயின்டன் டி காக், ஜே.பி.டுமினி, டூபிளெஸ்ஸிஸ், காலின் இங்ரம், ரோரி கிளெய்ன்வெல்ட், ரியான் மெக்லாரன், டேவிட் மில்லர், மோர்ன் மோர்கல், கிறிஸ் மோரிஸ், ராபின் பீட்டர்சன், ஆரோன் பங்கிசோ, லான்வாபோ சோட்சோபி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai