இந்திய பாட்மிண்டன் லீக்: நட்சத்திர வீரர்கள் அந்தஸ்தில் சாய்னா, சாங் வெய்
By dn | Published on : 21st July 2013 02:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இந்திய பாட்மிண்டன் லீக் (ஐபிஎல்) போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த லீ சாங் வெய், சாய்னா நெவால் ஆகியோர் நட்சத்திர வீரர்கள் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் அதிகத் தொகைக்கு (சுமார் ரூ. 30 லட்சத்துக்கு மேல்) ஏலத்தில் எடுக்கப்படுவர் என்று கருதப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாட்மிண்டன் போட்டியையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய பாட்மிண்டன் லீக் போட்டிக்கு இந்திய பாட்மிண்டன் சங்கம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல நகரங்களில் இப்போட்டி நடைபெற உள்ளது.
முதல் போட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தில்லி, புணே, பெங்களூர், ஹைதராபாத், லக்னெள மற்றும் மும்பை என 6 அணிகள் பங்கேற்கின்றன.
வீரர்கள் ஏலம்: இந்த அணிகளுக்காக உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த ஏலம் தில்லியில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
போட்டியில் பங்கேற்கும் சாங் வெய், நெவால், ஜுவாலா கட்டா, அஸ்வின் பொன்னப்பா, பிவி சிந்து மற்றும் காஷ்யப் ஆகியோர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். இவர்களின் அடிப்படை ஏலத்தொகையாக சுமார் ரூ. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் பிரிவில் குருசாய் தத் மற்றும் அஜய் ஜெய்ராம் ஆகியோர் ரூ. 15 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இவர்களைத் தவிர, இந்தோனேசியாவின் சோனி த்வி கன்கோரோ, ஜப்பானின் கெஞ்சி டாகோ, வியத்நாமின் டியன் மின் ஆகியோரின் அடிப்படைத் தொகையாக ரூ. 15 லட்சமும், முன்னாள் உலக சாம்பியனான இந்தோனேசியாவின் டெüஃபிக் ஹிதாயத்தின் அடிப்படைத் தொகை ரூ. 9 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியின்போது சீனாவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
அதனால் சீனாவில் இருந்து பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை. சிறந்த வீரர்களின் பற்றாக்குறையால், அறிமுகமற்ற உள்ளூர் வீரர்களை ஏலத்தின்போது அணியின் உரிமையாளர்கள் போட்டிபோட்டு தேர்வு செய்ய உள்ளனர்.
இந்தப் போட்டி இந்திய பாட்மிண்டன் விளையாட்டுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.