Enable Javscript for better performance
கோலி தலைமையில் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி- Dinamani

சுடச்சுட

    
    kohli

    இந்திய அணியின் அடுத்த கேப்டன் என வர்ணிக்கப்படும் விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஒரு கிரிக்கெட் தொடருக்கு கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

    ஜிம்பாப்வேயுடன் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. முதல் ஒருநாள் ஆட்டம் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

    சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்ற இந்திய அணியல் இருந்து மூத்த வீரர்களான யுவராஜ் சிங், கெüதம் கம்பீர், வீரேந்தர் சேவாக் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் நீக்கப்பட்டனர். பின்னர் இளம் வீரர்களுடன் சென்ற இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு கோப்பையை வென்றது. முத்தரப்புத் தொடரில் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்டதால், கோலி கேப்டனாகப் பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றினார்.

    இதனால், ஜிம்பாப்வே தொடருக்கும் இளம் அணியையே அனுப்ப தேர்வுக் குழு முடிவு செய்தது. இத்தொடரில் மூத்த வீரரும், இந்திய அணியின் கேப்டனுமாக உள்ள மகேந்திர சிங் தோனி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த அணிக்கு 24 வயது நிரம்பிய கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இது குறித்து கோலி கூறுகையில், அனுபவமற்ற வீரர்கள் இருப்பது பின்னடைவாகக் கருதவில்லை. வெற்றி தாகத்துடன் உள்ள 11 பேர்தான் அணிக்குத் தேவை. அணியில் தற்போது உள்ள 15 வீரர்களும் திறமை வாய்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

    2008-ம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை கோலி வழிநடத்திச் சென்றுள்ளார். அதேபோல், தில்லி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்கும் கேப்டனாகப் பொறுப்பு வகித்துள்ளார். இந்த அனுபவங்கள் அவருக்குக் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai