Enable Javscript for better performance
மே.இ. தீவுகள்-பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: கடைசி ஓவரில் 14 ரன்; ஆட்டம் \\\"டை\\\'- Dinamani

சுடச்சுட

    

    மே.இ. தீவுகள்-பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: கடைசி ஓவரில் 14 ரன்; ஆட்டம் "டை'

    By dn  |   Published on : 21st July 2013 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    simmons

    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது மேற்கிந்தியத் தீவுகள்.

    கடைசி பந்தில் கிடைத்த ரன் அவுட் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் நழுவவிட்டார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 2 ரன்கள் கிடைத்து ஆட்டம் டையானது. பாகிஸ்தானின் வெற்றிக் கனவும் தகர்ந்தது.

    மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே முடிந்த 2 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. இந்நிலையில், 3-வது ஒருநாள் ஆட்டம் செயின்ட் லூசியா தீவில் உள்ள கிரஸ் இஸ்லெட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 75 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.

    மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஹோல்டர் மற்றும் வேயன் பிராவோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது.

    டை செய்த ஹோல்டர்: கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் 2 பந்துகளில் அந்த அணி 2 ரன்கள் எடுத்தது. 3-வது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடிக்க, அணிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. அடுத்த பந்தில் ரன் ஏதுமில்லை. 5-வது பந்தில் ஹோல்டர் அசத்தலாக ஒரு சிக்ஸர் அடிக்க ஓரளவு நெருக்கடி குறைந்தது. இதனால் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டன.

    அந்த பந்தை தட்டி விட்டு மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் 2 ரன்கள் எடுக்க ஆட்டம் டையில் முடிந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 75 ரன்களும், சாமுவேல்ஸ் 46 ரன்களும் எடுத்தனர்.

    ஏமாற்றம்: வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தை டையில் முடித்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார். மிஸ்பா உல்-ஹக் மற்றும் சிம்மன்ஸ் ஆகியோர் தலா 75 ரன்கள் எடுத்ததால் ஆட்ட நாயகன் விருதுக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதால் தொடர் சமநிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai