Enable Javscript for better performance
ஆஷஸ் தொடரை வெல்வோம்: மைக்கேல் கிளார்க் நம்பிக்கை- Dinamani

சுடச்சுட

    
    clarke

    ஆஷஸ் தொடரில் 2-0 என்று பின்தங்கியபோதும், சரிவிலிருந்து மீண்டும் தொடரை வெல்வோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கிளார்க் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறியது:

    அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காதது பின்னடைவு.

    இப்போட்டியில் எங்கள் பேட்ஸ்மேன்களில் இருவர் 50 ரன்களுக்கு மேல் எடுத்தோம். ஆனால், தொடர்ந்து சிறப்பாக ஆடி அதிக ரன்கள் குவிக்க நாங்கள் தவறி விட்டோம்.

    லண்டன் மைதானம் பேட்டிங்குக்கு அற்புதமாக இருந்தது. அருமையான வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். முன்னணி வீரர்கள் சிறந்த அனுபவம் கொண்டிருந்தபோதும், அடிப்பதற்கு தேர்வு செய்த பந்து தவறானது. ஆனால், இங்கிலாந்து வீரர்கள் சரியான பந்துகளை மட்டும் தேர்வு செய்து விளையாடினர். மேலும், நீண்ட நேரம் விளையாடுவதை அவர்கள் விரும்பினர்.

    அடுத்த டெஸ்டில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டுமெனில், எங்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

    3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி, சசக்ஸ் அணிக்கு எதிராக 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி 3-வது ஆஷஸ் டெஸ்ட் தொடங்குகிறது.

    ரசிகர்கள் சிரிப்பு: ஆஷஸ் தொடரை வெல்வோம் என்று கிளார்க் கூறியபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிரித்தனர். இதனை கிளார்க்கும் கவனித்தார். அவர்களின் சிரிப்பை கிளார்க் சபதமாக எடுத்துக் கொண்டதாகவே தெரிகிறது.

    மீண்ட வரலாறு: இதற்கு முன் ஆஷஸ் தொடரில் இதேபோல் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று பின், வெகுண்டெழுந்து தொடரை வென்ற சாதனைகளும் நிகழ்ந்துள்ளன. 1936-37-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் இதேபோன்றதொரு சூழலை ஆஸ்திரேலியா தனது சொந்த நாட்டிலேயே சந்தித்து.

    அடுத்து நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

    அப்போது அணியில் கிரிக்கெட் ஜாம்பவானான டான் பிராட்மேன் இருந்தார். அத்தொடரில் பிராட்மேன் 810 ரன்கள் குவித்தார்.

    அந்த நிகழ்வு மீண்டும் ஈடேறுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆர்வத்துடன் அடுத்த போட்டிகளை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.சமீபத்தில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜோ ரூட்டுக்கு குக் பாராட்டு: ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 180 ரன்கள் குவித்ததுடன், முக்கியமான நேரத்தில் நிலைத்து நின்று ஆடி வந்த கிளார்க்கையும், க்வாஜாயையும் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனை உண்டாக்கினார். 22 வயது நிரம்பிய ரூட், 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    இந்த ஆட்டத்தில் ரூட்டின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது என்று இங்கிலாந்து கேப்டன் குக், அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியது: நெருக்கடியான நேரத்தில் தொடக்க வீரரான ரூட், பதற்றமின்றி விளையாடி சதமடித்தது பெரிய விஷயம். ஆஷஸ் தொடரை 5-0 என்ற கணக்கில் வெல்வது குறித்து தற்போது கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai