Enable Javscript for better performance
இந்தியா-ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

  
  India

  இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புதன்கிழமை தொடங்குகிறது.

  ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் கேப்டன் தோனி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், அஸ்வின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெறாத நிலையில், இளம் வீரர்களுடன் கோலி தலைமையில் களம் காண்கிறது இந்தியா.

  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்புத் தொடர் ஆகியவற்றில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்த ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஜோடி, இந்தத் தொடரிலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

  மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, சேதேஷ்வர் புஜாரா தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும். அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க புஜாராவுக்கு இது வாய்ப்பாகும்.

  இந்திய அணியின் பந்துவீச்சு, இளம் வேகப்பந்து வீச்சாளர்களான மோஹித் சர்மா, வினய் குமார், சமி அஹமது, ஜெயதேவ் உனட்கட் ஆகியோரை நம்பியே உள்ளது. இவர்களில் இருவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

  சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அமித் மிஸ்ரா, ஜம்மு காஷ்மீரின் முதல் வீரரான பர்வேஸ் ரசூல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணி இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால், ஏற்கெனவே ஜடேஜா இருப்பதால், ரசூல், மிஸ்ரா ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இவர்களில் மிஸ்ரா அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால், அவருக்கே வாய்ப்பு அதிகம். தோனி இல்லாததால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

  ஜிம்பாப்வே அணி, இந்தியாவுடனான தொடருக்காக கடந்த 2 மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் பிரென்டன் டெய்லர், இந்தியாவுக்கு எதிராக இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 184 ரன்கள் குவித்துள்ளார். எனவே அவர் இந்த முறையும் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பலாம். மற்றபடி அந்த அணியில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் பேட்ஸ்மேன்கள் இல்லை.

  அதேநேரத்தில் கைல் ஜார்விஸ், டென்டாய் சதாரா, பிரையன் விட்டோரி, எல்டான் சிகும்பரா, மைக்கேல் சைனவ்யா என 5 வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர்.

  இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இடம்பெறாதபோதிலும், ஜிம்பாப்வேயைவிட பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் ரெய்னா தலைமையில் விளையாடிய இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் தோற்றதோடு, இறுதிச்சுற்றுக்கும் முன்னேறவில்லை. எனவே இந்த முறை அதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுவரை இவ்விரு அணிகளும் 51 ஒருநாள் ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் ஜிம்பாப்வே 10 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இந்தியா 39 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரு ஆட்டங்கள் டையில் முடிந்துள்ளன.

  அணி விவரம்

  இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், சமி அஹமது, வினய் குமார், ஜெயதேவ் உனட்கட், மோஹித் சர்மா.

  ஜிபிரென்டன் டெய்லர் (கேப்டன்), சிக்கந்தர் ராஸô, டென்டாய் சதாரா, மைக்கேல் சைனவ்யா, எல்டான் சிகும்பரா, கிரீம் கிரெமர், கைல் ஜார்விஸ், திமிசென் மருமா, ஹாமில்டன் மஸகட்ஸô, நட்சாய் எம்'ஷாங்வீ, டினோடென்டா முடோம்போட்ஸி, சிபாண்டா, பிராஸ்பர் உட்சேயா, பிரையன் விட்டோரி, மால்கம் வாலர், சியான் வில்லியம்ஸ்.

  "ஓர் ஆட்டத்திலாவது இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுப்போம்'

  5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஓர் ஆட்டத்திலாவது சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுப்போம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆன்டி வாலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவுடனான தொடருக்காக கடந்த இரண்டு மாதங்களாக தீவிரப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம். உலகின் முதல் நிலை அணியை சந்திக்கவுள்ளோம் என்பதைத் தெரிந்துதான் இந்தத் தொடருக்கு தயாராகியிருக்கிறோம். எனவே எங்களால் முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாடி, ஓர் ஆட்டத்திலாவது இந்தியாவை வீழ்த்தி, அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுப்போம்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai