Enable Javscript for better performance
இந்திய பாட்மிண்டன் லீக்: அடிப்படைத் தொகை குறைக்கப்பட்டதால் ஜுவாலா கட்டா, அஸ்வினி அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    இந்திய பாட்மிண்டன் லீக்: அடிப்படைத் தொகை குறைக்கப்பட்டதால் ஜுவாலா கட்டா, அஸ்வினி அதிருப்தி

    By dn  |   Published on : 23rd July 2013 11:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் தங்களின் அடிப்படை ஏலத் தொகை குறைக்கப்பட்டதால் இரட்டையர் பிரிவில் புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகள் ஜுவாலா கட்டா, அஸ்வின் பொன்னப்பா ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போலவே, இந்திய பாட்மிண்டன் சங்கம் சார்பில் இந்திய பாட்மிண்டன் லீக் போட்டி வரும் ஆகஸ்ட் 14 முதல் 31-ம் தேதி வரை இந்தியாவின் 6 நகரங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    அதில் ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்திய வீராங்கனைகள் ஜுவாலா கட்டா, அஸ்வினி ஆகியோரின் அடிப்படை ஏலத் தொகை ரூ.29 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக குறைக்கப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற ஏலத்தின்போது கிறிஸ் டெல்லி ஸ்மாஷர்ஸ் அணி, ஜுவாலா கட்டாவை ரூ.18 லட்சத்துக்கும், புணே பிஸ்டன்ஸ் அணி, அஸ்வினியை ரூ.15 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தன.

    ஜுவாலா: இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ள ஜுவாலா கட்டா, "அடிப்படை ஏலத் தொகை குறைக்கப்பட்டதால் நானும், அஸ்வினியும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம். நானும், அஸ்வினியும் முன்னணி வீராங்கனைகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறோம்.

    எனவே எங்களுக்கு நல்ல தொகையை அடிப்படைத் தொகையாக நிர்ணயித்திருக்க வேண்டும். அடிப்படைத் தொகை குறைக்கப்பட்டதைக்கூட எங்களிடம் தெரிவிக்கவில்லை.

    மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிக்குப் பதிலாக ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தை சேர்த்திருக்கிறார்கள் என்பதே எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. நான் என்ன சொல்வது? எங்களை அவமதித்துள்ளனர். இந்திய பாட்மிண்டன் லீக்கால் வேதனையும், துயரமும் அடைந்துள்ளோம்' என்றார்.

    அஸ்வினி: மற்றொரு வீராங்கனையான அஸ்வினி கூறுகையில், "அடிப்படைத் தொகை குறைக்கப்பட்டது தொடர்பாக யாரும் எனக்கு தெரிவிக்கவில்லை. அதனால் பெரும் வேதனையடைந்துள்ளேன்.

    ஏலம் முடியும் வரை அடிப்படைத் தொகை குறைக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது.

    மகளிர் இரட்டையர் போட்டி கிடையாது என்பதால், என்னுடைய அடிப்படைத் தொகையை குறைத்ததாகக் கூறுகிறார்கள். அப்படியானால் மற்றொரு இரட்டையர் பிரிவு வீராங்கனை என்னைவிட அதிக தொகைக்கு எப்படி ஏலம் போனார்?

    இது எந்த வகையிலும் பொருத்தமற்றது. இந்திய பாட்மிண்டன் லீக் நிர்வாகம், முன்னணி வீராங்கனைகளாக எங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், எங்களை அவ்வாறு நடத்தவில்லை' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai