Enable Javscript for better performance
தென் ஆப்பிரிக்காவுக்கு 29 ஓவர்களில் 176 ரன்கள் இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு 29 ஓவர்களில் 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக முதலில் பேட் செய்த இலங்கை அணி, 49.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதைத்தொடர்ந்து இலங்கையின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது.

    இலங்கைத் தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம், மழை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அந்த அணியில் உபுல் தரங்கா 3 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், 2-வது விக்கெட்டுக்கு தில்ஷான்-குமார் சங்ககாரா ஜோடி 59 ரன்கள் சேர்த்தது. சங்ககாரா 60 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் வந்த ஜெயவர்த்தனா 17 ரன்களில் பீட்டர்சன் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுக்க, மோர்கல் பந்துவீச்சில் தில்ஷான் வீழ்ந்தார். 64 பந்துகளைச் சந்தித்த தில்ஷான் ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்தார்.

    இதன்பிறகு திரிமானி 13, முபாரக் 8, திசாரா பெரேரா 11 ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் தனிநபராகப் போராடிய கேப்டன் சன்டிமால் 51 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 49.2 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதைத் தொடர்ந்து இலங்கையின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்ன் மோர்கல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு 176: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்காவுக்கு 29 ஓவர்களில் 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேட் செய்த அந்த அணியில் ஆல்விரோ பீட்டர்சனும், ராபின் பீட்டர்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

    மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே ராபின் பீட்டர்சன் (3 ரன்கள்) போல்டு ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜே.பி.டுமினி 15 ரன்களில் வெளியேறினார். அந்த அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்திருந்தது. ஆல்விரோ பீட்டர்சன் 20, டிவில்லியர்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    ஆம்லாவுக்கு காயம்: தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங் செய்தபோது, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆம்லாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம்லாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதனால் அவர் தொடக்க வீரராக பேட் செய்ய வரவில்லை.

    அதேநேரத்தில் அவர் பேட் செய்ய களம்புகுவாரா, இல்லையா என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai