பயிற்சியாளராக நியமித்தால் சிறந்த அணியை உருவாக்குவேன்: தன்ராஜ் பிள்ளை
By dn | Published on : 23rd July 2013 01:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக தன்னை நியமித்தால், ஓர் ஆண்டில் சிறந்த அணியை உருவாக்குவேன் என்று முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஹாக்கி அணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க தன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேசமயம், சிறந்த பயிற்சியாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவையில்லை. அவர்களுக்கு நாம் அதிக அளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.
கெர்ஹார்டு ராச் முதல் மைக்கேல் நாப்ஸ் வரை (2004-2012) இந்தியாவின் செயல்பாடு எவ்வகையிலும் முன்னேற்றம் காணவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறி வருகிறோம்.
இந்தியாவில் சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளனர். எனக்கு வாய்ப்பளித்து, சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தால் ஓர் ஆண்டுக்குள் சிறந்த முடிவைத் தருவேன் என்று தெரிவித்தார்.
தன்ராஜ் பிள்ளை தற்போது, ஏர் இந்தியா ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். தேசிய அளவில் ஏர் இந்தியா அணி சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற அணியின் பயிற்சியாளர், தேசிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில், செட்ரிக் டி' செளஸா, வாசுதேவன் பாஸ்கரன், ராஜீந்தர் சிங் அல்லது ஹரேந்திர சிங் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். அப்படியானால், நான் மட்டும் பயிற்சியாளராக ஏன் ஆகக்கூடாது என்றும் தன்ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.
உலகுக்கே, ஹாக்கி குறித்து நாம் கற்றுக் கொடுத்தோம். ஆனால் இன்று நமக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவைப்படுகிறார் என்றும் தன்ராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.