Enable Javscript for better performance
முதல் ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது ராஜஸ்தான்- Dinamani

சுடச்சுட

    

    சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், கடந்த ஐபிஎல் போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸýம் மோதுகின்றன.

    இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதி ஆட்டம் தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. 2-வது அரையிறுதி ஆட்டமும் அக்டோபர் 5-ம் தேதி இதே மைதானத்தில்தான் நடக்கிறது. முதல் அரையிறுதி ஆட்டம் அக்டோபர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.

    செப்டம்பர் 22-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் (ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 போட்டியின் சாம்பியன்), டிரினிடாட் அன்ட் டொபாகோ (மேற்கிந்தியத் தீவுகள்) அணிகள் மோதுகின்றன. அதேநாளில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் கடந்த ஐபிஎல்லில் 2-வது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டைட்டன்ஸ் (தென் ஆப்பிரிக்கா) அணியை சந்திக்கிறது.

    இந்த முறை மொத்தம் 29 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தில்லி, ஜெய்ப்பூர், ராஞ்சி, குஜராத், ஹைதராபாத் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

    இந்தப் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகள் பிரதான சுற்றில் விளையாட நேரடித்தகுதி பெற்றுவிட்டன. இரு அணிகள், தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

    "ஏ' பிரிவில் மும்பை இண்டியன்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்பிரிக்கா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா), ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 5-வது அணி தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு செய்யப்படும்.

    "பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், டைட்டன்ஸ் (தென் ஆப்பிரிக்கா), பிரிஸ்பேன் ஹீட் (ஆஸ்திரேலியா), டிரினிடாட் அன்ட் டொபாகோ (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகிய அணிகள் உள்ளன. 5-வது அணி, தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.

    தகுதிச்சுற்றில் ஒடாகோ வோல்ட்ஸ் (நியூஸிலாந்து), சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் (ஐபிஎல்லில் 4-வது இடத்தைப் பிடித்த அணி), எஸ்எல்சி1 (இலங்கை), ஃபைஸலாபாத் வால்வ்ஸ் (பாகிஸ்தான்) ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிரதான சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஹைதராபாதில் செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெறுகின்றன.

    பிரதான சுற்றில் "ஏ' பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளும், "பி' பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதியில் "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியும், "பி' பிரிவில் 2-வது இடத்தைப் பிடிக்கும் அணியும் மோதுகின்றன. 2-வது அரையிறுதியில் "ஏ' பிரிவில் 2-வது இடத்தைப் பிடிக்கும் அணியும், "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணியும் மோதும் என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai