Enable Javscript for better performance
மேட்ச் பிக்ஸிங்: குரோனியே மீது குற்றப்பத்திரிகை தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    மேட்ச் பிக்ஸிங்: குரோனியே மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    By dn  |   Published on : 23rd July 2013 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Hansie

    மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே மீது திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு 2000-ம் ஆண்டில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்கு தற்போதுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குரோனியே உள்பட 6 பேர் மீதான குற்றப்பத்திரிகையை தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஆகாஷ் ஜெயின் முன்னிலையில் தில்லி போலீஸார் தாக்கல் செய்தனர். 90 பக்கங்கள் கொண்ட இக்குற்றப்பத்திரிகை நீதிபதி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

    வெளிநாட்டு சூதாட்டக்காரர்களான சஞ்சய் சாவ்லா மற்றும் மன்மோகன் கத்தார், தில்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களான ராஜேஷ் கல்ரா மற்றும் சுனில் தத்கா, டி-சீரிஸ் உரிமையாளர்கள் குல்ஷன் குமார் மற்றும் அவரது சகோதரர் கிஷன் குமார் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன. இவர்களில் சாவ்லா மற்றும் கத்தார் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ளனர். விசாரணைக்காக அவர்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.

    குரோனியே, 2002-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்து விட்டார். அதனால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையின் 2-வது பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. குரோனியேவைத் தவிர வேறு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை.

    2000-ம் ஆண்டு கிரிக்கெட் தொடரின்போது, லண்டனில் உள்ள சூதாட்டக்காரருடன் குரோனியே பேசியதை தில்லி போலீஸின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்தது. இதனை குரோனியே மறுத்தார். எனினும் 2001-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் குரோனியேவுக்கு ஆயுள் காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai