Enable Javscript for better performance
கோலி சதம்; இந்தியா அபார வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    kohli

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

    இந்திய கேப்டன் விராட் கோலி 108 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

    முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இந்தியா 31 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

    ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அம்பட்டி ராயுடு, ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

    டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் சிபான்டா-சிக்கந்தர் ராஸா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21.5 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தது. 72 பந்துகளைச் சந்தித்த சிபான்டா 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வில்லியம்ஸ் களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சிக்கந்தர் 88 பந்துகளில் அரைசதம் கண்டார். இது அவருடைய முதல் அரைசதமாகும்.

    அந்த அணி 105 ரன்களை எட்டியபோது வில்லியம்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த மஸகட்ஸா 11, கேப்டன் பிரென்டன் டெய்லர் 12, வாலர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே தடுமாற்றம் கண்டது. அந்த அணி 40.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த சிகும்பரா அதிரடியில் இறங்க, ஜிம்பாப்வேயின் ரன் வேகம் அதிகரித்தது.

    இதனிடையே சிக்கந்தர் ராஸா 82 ரன்களில் மிஸ்ரா பந்துவீச்சில் போல்டு ஆனார். அவர் 112 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். பாகிஸ்தானியரான சிக்கந்தர், தற்போது ஜிம்பாப்வே அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும், மறுமுனையில் சிகும்பரா தொடர்ந்து அதிரடி காட்டினார். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது. சிகும்பரா 34 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியத் தரப்பில் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    கோலி சதம்: பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவன் 17 ரன்களிலும், ரோஹித் சர்மா 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் கோலியும், அம்பட்டி ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர்.

    இந்த ஜோடி சிறப்பாக விளையாட, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டதோடு, வெற்றியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. கோலி 57 பந்துகளிலும், ராயுடு 74 பந்துகளிலும் அரைசதம் கண்டனர்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி, 40-வது ஓவரில் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் கோலி அடித்த 15-வது சதம் இது. இதன்பிறகு அதிரடி காட்டிய கோலி, முடோம்போட்ஸி வீசிய 41-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விரட்டினார். ஆனால் அவரின் அதிரடி நிலைக்கவில்லை. அடுத்த ஓவரிலேயே அவர்

    ஆட்டமிழந்தார். அவர் 108 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். கோலி-ராயுடு ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தது.

    பின்னர் வந்த ரெய்னா, ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் களம்புகுந்தார். 45-வது ஓவரின் 5-வது பந்தில் அம்பட்டி ராயுடு பவுண்டரியை விளாச, இந்தியா 4 விக்கெட் விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

    அம்பட்டி ராயுடு 84 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், கார்த்திக் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் ஆட்டம் இதே மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    அறிமுக நாயகன் அம்பட்டி! இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய அம்பட்டி ராயுடு, தேவையில்லாத ஷாட்களை அடிக்காமல், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அரை சதமடித்ததோடு, கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி, இந்தியாவின் வெற்றியிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

     

    சுருக்கமான ஸ்கோர்

    ஜிம்பாப்வே-228/7

    (சிக்கந்தர் 82, சிகும்பரா 43*, சிபான்டா 34, அமித் மிஸ்ரா 3வி/43)

    இந்தியா-230/4 (விராட் கோலி 115, ராயுடு 63*, உட்சேயா 2வி/34)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai