Enable Javscript for better performance
பிசிசிஐக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    
    bcci

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் அதன் 29 உறுப்பு சங்கங்களின் பயன்பாட்டில் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை கேட்டு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிஐசி அமர்வு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. வியாழன் (ஜூலை 25) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசாரணை நடைபெறுகிறது.

    மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மைதானங்களை பிசிசிஐ மற்றும் அதன் உறுப்பு சங்கங்கள் பயன்படுத்தி வருவது குறித்தும், அதற்காக அரசுக்கு அவை அளிக்கும் வாடகை அல்லது குத்தகை தொடர்பான விவரங்களையும் கேட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி, சுங்க வரி, கேளிக்கை வரி ஆகியவற்றில் விலக்கு பெற்றது உள்ளிட்ட விவரங்களையும் அளிக்குமாறு சிஐசி கோரியுள்ளது.

    இதே காலக்கட்டத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தியபோது பாதுகாப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து சிஐசி ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விசாரணையின்போது பிசிசிஐ மற்றும் அதன் உறுப்புச் சங்கங்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளுடனோ நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சிஐசி தெரிவித்துள்ளது.

    பிசிசிஐ ஒரு பொது அமைப்பா, இல்லையா என்ற கேள்வி இங்கு எழுகிறது. அதனால் பிசிசிஐ, அரசின் நிதியுதவியைப் பெறுகிறதா என்பதைக் கண்டறிய சிஐசி விரும்புகிறது. அதன் காரணமாகவே அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளோம் என்று சிஐசி தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

    தில்லியைச் சேர்ந்த தகவலறியும் ஆர்வலர் மது அகர்வால் என்பவர், "பிசிசிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு வசதிகளையும் பயன்படுத்தி வருகிறது. எனவே பிசிசிஐயை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது' என்று கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை ஏற்றே சிஐசி இப்போது பிசிசிஐ மற்றும் அதன் உறுப்பு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai