Enable Javscript for better performance
வெற்றியை நிர்ணயித்தது மழை: தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    வெற்றியை நிர்ணயித்தது மழை: தென் ஆப்பிரிக்காவுக்கு 2-வது தோல்வி

    By dn  |   Published on : 25th July 2013 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    srilanka

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

    இலங்கைத் தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை இங்கை அணி 49.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து இலங்கையின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கைத் தரப்பில் தில்ஷான், கேப்டன் தினேஷ் சண்டிமால் ஆகியோர் தலா 43 ரன்களும், சங்ககாரா 37 ரன்களும் எடுத்தனர்.

    176 ரன்கள் இலக்கு: இதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு 29 ஓவர்களில் 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லாவுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆல்விரோ பீட்டர்சனும், ராபின் பீட்டர்சனும் அந்த அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். முதல் ஓவரிலேயே ராபின் பீட்டர்சன் 3 ரன்களில் வீழ்ந்தார்.

    இதன்பிறகு ஜே.பி.டுமினி 15, ஆல்விரோ பீட்டர்சன் 24, கேப்டன் டிவில்லியர்ஸ் 12, டூபிளெஸ்ஸிஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 13.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.

    மீண்டும் மழை: இதன்பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லரும், ரியான் மெக்லாரனும் நிதானமாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். அந்த அணி 21 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. அப்போது டேவிட் மில்லர் 22, மெக்லாரன் 14 ரன்களுடன் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தோல்வி: மழை தொடர்ந்து பெய்ததால் வெற்றியைத் தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா 122 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அந்த அணி 21 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், 17 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி கண்டது.

    51 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா, தற்போது 2-வது ஆட்டத்திலும் தோல்வி கண்டுள்ளது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை பல்லகெலே நகரில் நடைபெறவுள்ளது.

    ஆம்லா விளையாடுவது சந்தேகம்

    தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் ஆம்லாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது.

    முதல் ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடாத ஆம்லா, 2-வது ஆட்டத்தில் பீல்டிங்கின்போது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருடைய இடது தொடைப்பகுதியில் உள்ள தசைகள் கிழிந்திருப்பது தெரியவந்தது.

    இதுபோன்ற காயங்கள் குணமடைய குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும். எனினும் 3 அல்லது 4-வது ஆட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஆம்லாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சுருக்கமான ஸ்கோர்

    இலங்கை-223/9

    (தில்ஷான் 43, சண்டிமால் 43, சங்ககாரா 37, மோர்ன் மோர்கல் 3வி/34)

    தென் ஆப்பிரிக்கா-104/5 (ஆல்விரோ பீட்டர்சன் 24, மில்லர் 22*, டுமினி 15, ஹெராத் 2வி/16)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai