Enable Javscript for better performance
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்- Dinamani

சுடச்சுட

    

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

    By dn  |   Published on : 26th July 2013 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt2

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகண்டது.

    இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான்.

    மேற்கிந்தியத் தீவுகளின் கிராஸ் ஐஸ்லெட்டில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டுவைன் ஸ்மித் 7 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரன் பிராவோ 9 ரன்களிலும் வெளியேறினர். அதேவேளையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சார்லஸ் 43 ரன்கள் எடுத்தார்.

    5-வது வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன்பிறகு மார்லான் சாமுவேல்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 41.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

    பிராவோ அதிரடி: இதன்பிறகு சிம்மன்ஸ் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேற, கடைசிக் கட்டத்தில் கேப்டன் டுவைன் பிராவோவும், டேரன் சமியும் அதிரடியாக விளையாடினர். இதனால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள்.

    பிராவோ 27 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரன் சமி 18 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது இர்ஃபான், சயீத் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் வெற்றி: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் நசிர் ஜம்ஷெட்-அஹமது ஷெஸாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது. ஜம்ஷெட் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களம் கண்ட முகமது ஹபீஸ் 11 ரன்களில் நடையைக் கட்டினார்.

    இதையடுத்து ஷெஸாத்துடன் இணைந்தார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. 100 பந்துகளைச் சந்தித்த ஷெஸாத் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹாரீஸ் சோஹைல் 17 ரன்களில் வெளியேற, உமர் அக்மல் களம்புகுந்தார். இதனிடையே மிஸ்பா உல் ஹாக் 77 பந்துகளில் அரைசதம் கண்டார். அந்த அணி 226 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 28 பந்துகளைச் சந்தித்த உமர் அக்மல் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி இரு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. டுவைன் பிராவோ வீசிய 49-வது ஓவரில் அப்ரிதி ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாச, கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது.

    ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் அப்ரிதி ஒரு ரன் எடுக்க ஸ்கோர் சமநிலையை எட்டியது. ஆனால் அடுத்த பந்தில் மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழந்தார். அவர் 93 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் வந்த அஜ்மல் இரு பந்துகளை வீணடித்தார். எனினும் 5-வது பந்தில் நல்ல ரன் அவுட் வாய்ப்பை போலார்ட் கோட்டைவிடவே, பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அப்ரிதி 13, அஜ்மல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக 3-வது ஆட்டம் "டை'யில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    20 நிமிட மழை: உமர் அக்மலின் அவுட்டைத் தொடர்ந்து மழை பெய்யவே, ஆட்டம் 20 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அப்போதைய நிலையில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கும்.

    சுருக்கமான ஸ்கோர்

    மே.இ.தீவுகள்-242/7 (டுவைன் பிராவோ 48, சாமுவேல்ஸ் 45, சார்லஸ் 43, சமி 29*,

    ஜுனைத் கான் 3வி/48)

    பாகிஸ்தான்-243/6 (ஷெஸாத் 64, மிஸ்பா 63, உமர் அக்மல் 37, டினோ பெஸ்ட் 3வி/48)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai