Enable Javscript for better performance
வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்தியா- Dinamani

சுடச்சுட

    
    kohli

    இந்திய-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    ஏற்கெனவே இங்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதனால் இந்த ஆட்டத்திலும் வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும்.

    கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த கேப்டன் கோலி, இந்த ஆட்டத்திலும் ஜிம்பாப்வே பெüலர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராகக் களமிறங்கிய அம்பட்டி ராயுடு அரை சதமடித்தார். இது இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவன், ரோஹித் சர்மா மற்றும் மிடில் ஆர்டரில் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட முடியும். சேதேஷ்வர் புஜாராவுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைப்பது கடினமே.

    பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய வினய் குமாருக்குப் பதிலாக மோஹித் சர்மா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    ஒருவேளை வினய் குமாருக்குப் பதிலாக கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கலாம் என்று முடிவெடுத்தால், காஷ்மீரின் முதல் வீரரான பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். எனினும் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இருப்பதால், பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதே.

    ஜிம்பாப்வே அணி, கடந்த ஆட்டத்தில் 50 ஓவர்களும் பேட் செய்தது. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்களை ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டதே அதற்குக் காரணமாகும். பாகிஸ்தானில் பிறந்தவரான சிக்கந்தர் ராஸா, சிகும்பரா ஆகியோர் சிறப்பாக விளையாடி, ஜிம்பாப்வே நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர். இந்த ஆட்டத்திலும் சிக்கந்தர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பந்துவீச்சில் பிராஸ்பர் உட்சேயாவைத் தவிர, யாரும் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. எனினும் இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவதற்கு ஜிம்பாப்வே பெüலர்கள் முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டி நேரம்: பகல் 12.30

    நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai