Enable Javscript for better performance
மில்லர் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    david

    இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இலங்கை 43.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு சுருண்டது.

    இலங்கையின் பல்லகெலேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் தலா 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு ஆட்டங்களில் விளையாட விதிக்கப்பட்ட தடை முடிந்ததைத் தொடர்ந்து, இலங்கை கேப்டன் மேத்யூஸ், மீண்டும் அணிக்குத் திரும்பினார். அந்த அணியில் ஏஞ்செலோ பெரேரா, மெண்டிஸ் ஆகியோருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் திரிமானி, சமிந்தா எரங்கா, ஜெகன் முபாரக் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    தென் ஆப்பிரிக்க அணியில் காயமடைந்த தொடக்க ஆட்டக்காரர் ஆம்லாவுக்குப் பதில் டி காக் சேர்க்கப்பட்டார். ஆரோன் பங்கிசோ, கிறிஸ் மோரீஸ் ஆகியோர் நீக்கப்பட்டு பெஹார்டியன், சோட்சோபி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆல்விரோ பீட்டர்சன் 8, டி காக் 20, பின்னர் வந்த டுமினி 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து தடுமாறியது.

    இதன்பிறகு கேப்டன் டிவில்லியர்ஸýம், டூபிளெஸ்ஸிஸýம் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். எனினும் 95 ரன்களை எட்டியபோது டிவில்லியர்ஸின் விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா. ஒரு ரன் எடுப்பதற்காக தேவையில்லாமல் ஓடி ரன் அவுட்டான டூபிளெஸ்ஸிஸ் 33 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த பெஹார்டியன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா மீண்டும் சரிவுக்குள்ளானது. அப்போது அந்த அணி 29.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

    மில்லர் அதிரடி: இதையடுத்து டிவில்லியர்ஸýடன் இணைந்தார் டேவிட் மில்லர். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்க்க, தென் ஆப்பிரிக்கா மெதுவாக சரிவிலிருந்து மீண்டது. அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ், மெண்டிஸ் வீசிய 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 72 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து வந்த ராபின் பீட்டர்சன் 3 ரன்களில் நடையைக் கட்ட, ரியான் மெக்லாரன் களம்புகுந்தார். இதன்பிறகு டேவிட் மில்லர் அதிரடியில் இறங்கினார். 62 பந்துகளில் ஒருநாள் 5-வது அரைசதத்தை அடித்த மில்லர், கடைசிக் கட்ட ஓவர்களை பதம்பார்த்தார். பெரேரா, மலிங்கா ஆகியோர் வீசிய கடைசி இரு ஓவர்களில் மட்டும் மில்லர் 4 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் விரட்ட, அந்த ஓவர்களில் 38 ரன்கள் கிடைத்தன. இதனால் தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது.

    டேவிட் மில்லர் 72 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 85, மெக்லாரன் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இலங்கைத் தரப்பில் அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும், திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இலங்கை தோல்வி: பின்னர் ஆடிய இலங்கை அணியில் திசாரா பெரேரா அதிகபட்சமாக 49 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார்.

    பீட்டர்சன் வீசிய 33-வது ஓவரை எதிர்கொண்ட பெரேரா, 5 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். பீட்டர்சன் ஒரு வைடையும் வீசினார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 35 ரன்கள் கிடைத்தன. ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ரன் இதுதான்.

    அவருக்கு அடுத்தபடியாக சன்டிமால் 29, ஜெயவர்த்தனா 24 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இலங்கையின் இன்னிங்ஸ் 43.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சோட்சோபி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 4-வது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு...

    இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது தென் ஆப்பிரிக்கா.

    முன்னதாக 1993-ல் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

    இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டங்களில் அந்நாட்டு அணிக்கெதிராக தென் ஆப்பிரிக்கா இதுவரை இரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai