Enable Javscript for better performance
ஷிகர் தவன் சதம்: இந்தியாவுக்கு 2-வது வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    dhawan

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

    முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங்கை தேர்வு செய்யவே, இந்தியா முதலில் பேட் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா 2-வது ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 14, அம்பட்டி ராயுடு 5, ரெய்னா 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற, 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா.

    5-வது விக்கெட்டுக்கு 167: இதன்பிறகு ஷிகர் தவனுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா சரிவிலிருந்து மீண்டது. ஷிகர் தவன் 70 பந்துகளிலும், கார்த்திக் 64 பந்துகளிலும் அரைசதத்தை எட்டினர்.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தவன், 115 பந்துகளில் சதமடித்தார். இந்தியா 232 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 74 பந்துகளைச் சந்தித்த தினேஷ் கார்த்திக் 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

    இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்தது. கார்த்திக்கைத் தொடர்ந்து ஷிகர் தவனும் ஆட்டமிழந்தார். அவர் 127 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா 15, அமித் மிஸ்ரா 9 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் வினய் குமார் 2 சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். முகமது சமி தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாச, அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் கிடைத்தன. இதனால் இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.

    வினய் குமார் 12 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27, முகமது சமி ஒரு பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் விட்டோரி 2 விக்கெட் எடுத்தார்.

    சிறப்பான தொடக்கம்: 295 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராஸா-சிபான்டா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து சிபான்டாவுடன் இணைந்தார் மஸகட்ஸா. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வேயின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

    அமித் மிஸ்ரா வீசிய 18-வது ஓவரில் சிபான்டா சிக்ஸர் அடித்து அரைசதம் கண்டார். இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. அந்த அணி 109 ரன்களை எட்டியபோது சிபான்டா 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 65 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

    இதன்பிறகு கேப்டன் டெய்லர் 0, வில்லியம்ஸ் 5, மஸகட்ஸா 34, வாலர் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.

    7-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள்: 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிகும்பராவும், உட்சேயாவும் இந்திய பெüலர்களைச் சோதித்தனர். கடும் போராட்டத்துக்குப் பிறகு சிகும்பராவை வெளியற்றினார் முகமது சமி. சிகும்பரா 58 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் வந்த ஜார்விஸ் (2), விட்டோரி (0) ஆகியோர் அடுத்தடுத்து உனட்கட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தனர். அதேநேரத்தில் மறுமுனையில் சிறப்பாக ஆடிய உட்சேயா, அரைசதம் கண்டார். எனினும் அந்த அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. உட்சேயா 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்தியத் தரப்பில் ஜெயதேவ் உனட்கட் 10 ஓவர்களில் 41 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஷிகர் தவன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை இதே ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது.

    கோலி அவுட்டால் சர்ச்சை! இந்த ஆட்டத்தில் கோலி 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஜார்விஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த கேட்ச்சை, ஜிம்பாப்வே வீரர் வாலர் பிடித்தார். ஆனால் அது கேட்ச்சா, இல்லையா என்பது வாலருக்கும், கோலிக்கும் தெரியவில்லை. இதனால் கோலி, வெளியேறாமல் அங்கேயே நின்றார். டி.வி. ரீபிளேயில் பார்த்தபோது, அது கேட்ச்சா, இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் நடுவரிடம் வாக்குவாதம் செய்த கோலி, கோபத்தோடு வெளியேறினார்.

    3-வது சதம்

    இந்த ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது 3-வது சதத்தைப் பதிவு செய்தார் ஷிகர் தவன். இது அவருடைய 17-வது ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் தவன், மூன்று முறை (3,14,70 ரன்களில் இருந்த போது) அவுட்டாவதிலிருந்து தப்பினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai