Enable Javscript for better performance
கொல்கத்தாவில் இன்று கூடுகிறது பிசிசிஐ செயற்குழு- Dinamani

சுடச்சுட

    
    BCCI

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    வரும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான கிரிக்கெட், ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி உள்ளிட்டோரின் விவகாரம் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பான அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் வெளியிட்டது.

    அதில், 3 டெஸ்ட், 7 ஒருநாள் ஆட்டங்கள், 2 இருபது ஓவர் போட்டிகளில் இவ்விரு அணிகளும் விளையாடும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் போட்டி தொடர்பான விவரங்களை தங்களிடம் கலந்தாலோசிக்காமல், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தன்னிச்சையாக போட்டி அட்டவணையை வெளியிட்டுவிட்டதாக பிசிசிஐ அதிருப்தி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, 2 இருபது ஓவர் போட்டியை நடத்தவே பிசிசிஐ விரும்புவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐயின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில், "தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

    எனினும் பிசிசிஐ கூட்டத்துக்குப் பிறகு மாற்று போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பப்படும் என நம்புகிறேன்' என்றார்.

    பிசிசிஐயின் எதிர்ப்பையும் மீறி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஹாரூன் லோர்கட் நியமிக்கப்பட்டார்.

    இதனால் தென் ஆப்பிரிக்க வாரியம் அறிவித்த போட்டி அட்டவணையில் இருந்து போட்டிகளைக் குறைக்க வேண்டும் என பிசிசிஐயில் உள்ள சிலர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

    இதேபோல் ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி மீதான நிதி முறைகேடு தொடர்பாக ஜோதிராதித்ய சிந்தியா, அருண் ஜேட்லி ஆகியோர் அளித்துள்ள 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை குறித்தும் பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

    எனினும் இது தொடர்பாக இடைக்காலத் தலைவரான டால்மியா இறுதி முடிவெடுக்கமாட்டார் என்று தெரிகிறது.

    ஸ்பாட் ஃபிக்ஸிங் விசாரணை அறிக்கை தாக்கல்?

    ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெயராம் செüதா, பால சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு, தங்களின் விசாரணை அறிக்கையை பிசிசிஐயிடம் சமர்ப்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    "பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் தொடர்பில்லை' என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் பிசிசிஐ நிர்வாகிகள் இது தொடர்பாக பேச மறுத்துவிட்டனர். பிசிசிஐயின் இடைக்காலத் தலைவர் டால்மியா, செயலர் சஞ்சய் படேல் ஆகியோர், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ளனர்.

    எனினும் இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த வியாழக்கிழமை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை வெளியாகும்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் இருந்து குருநாத் மெய்யப்பன் விடுவிக்கப்படுவார்' என்று தெரிவித்தன.

    விசாரணைக் குழுவின் அறிக்கை மெய்யப்பனுக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில், சீனிவாசன் மீண்டும் தலைவர் பதவிக்கு வருவதற்கு வழி ஏற்படும். மேலும் செப்டம்பரில் நடைபெறவுள்ள பிசிசிஐ தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியையும் சீனிவாசன் பெறுவார். எனினும் பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கமாட்டார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் செயலர் காசி விஸ்வநாதன் பங்கேற்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai