Enable Javscript for better performance
தொடரை வென்றது இந்தியா- Dinamani

சுடச்சுட

    
    kohli

    ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

    5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டதன் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்தியா.

    முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 46 ஓவர்களில் 183 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா 35.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

    ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பீல்டிங்கை தேர்வு செய்தார்.

    இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபான்டா ரன் ஏதுமின்றியும், சிக்கந்தர் ராஸா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி தடுமாற்றம் கண்டது.

    இதன்பிறகு மஸகட்ஸா-கேப்டன் பிரென்டன் டெய்லர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. டெய்லர் 44 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார்.

    அவரைத் தொடர்ந்து மஸகட்ஸா 38, வாலர் 0, சிகும்பரா 3 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் சரிவுக்குள்ளான ஜிம்பாப்வே, 22.2 ஓவர்களில் 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் தனிநபராகப் போராடிய வில்லியம்ஸ் 53 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார்.

    பின்வரிசையில் சதாரா 23, விட்டோரி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜிம்பாப்வேயின் இன்னிங்ஸ் 183 ரன்களில் முடிவுக்கு வந்தது.

    இந்தியத் தரப்பில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்தியா வெற்றி: பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா இந்த ஆட்டத்திலும் விரைவாக ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இதையடுத்து ஷிகர் தவனுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தது. 32 பந்துகளைச் சந்தித்த ஷிகர் தவன் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதைத்தொடர்ந்து கேப்டன் கோலியுடன் இணைந்தார் அம்பட்டி ராயுடு. இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது.

    இந்தியா 131 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் விட்டோரி. 54 பந்துகளைச் சந்தித்த ராயுடு 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து களம்புகுந்த ரெய்னா, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி, பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார்.

    தொடர்ந்து வேகம் காட்டிய ரெய்னா, சதாரா வீசிய 36-வது ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரியை விளாச, இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

    கோலி 88 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68, ரெய்னா 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆட்டம் வரும் வியாழக்கிழமை புலவாயோ நகரில் நடைபெறவுள்ளது.

    சுருக்கமான ஸ்கோர்

    ஜிம்பாப்வே-183

    (வில்லியம்ஸ் 45,

    மஸகட்ஸா 38, டெய்லர் 23,

    அமித் மிஸ்ரா 4வி/47)

    இந்தியா-187/3

    (கோலி 68*, தவன் 35,

    ராயுடு 33, ரெய்னா 28*,

    சதாரா 1வி/34)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai