Enable Javscript for better performance
முதல் டி20: அப்ரிதி அதிரடி; பாகிஸ்தான் \\\"த்ரில்\\\' வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    afridi

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

    கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, இப்போதுதான் முதல்முறையாக இருபது ஓவர் போட்டியில் தோல்வி கண்டுள்ளது.

    முதலில் பேட் செய்த நடப்பு உலக சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசிப் பந்தில் "த்ரில்' வெற்றி கண்டது.

    மேற்கிந்தியத் தீவுகளின் கிங்ஸ்டௌனில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சார்லஸ் (1), அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் (5) ஆகியோர் ஹபீஸ் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.

    இதன்பிறகு சிம்மன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய சாமுவேல்ஸ் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் 6.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து தடுமாறியது.

    போலார்ட், சமி அதிரடி: 5-வது விக்கெட்டு டுவைன் பிராவோ-கிரண் போலார்ட் ஜோடி 56 ரன்கள் சேர்க்க, மேற்கிந்தியத் தீவுகள் சரிவிலிருந்து மீண்டது. வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிய பிராவோ, 35 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    கடைசிக் கட்டத்தில் போலார்ட்-கேப்டன் டேரன் சமி ஜோடி அதிரடியாக விளையாட மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 14 பந்துகளைச் சந்தித்த சமி 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 5-வது பந்தில் வீழ்ந்தார். கடைசிப் பந்தில் சுனில் நரேன் (0) ரன் அவுட்டாக, மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது.

    போலார்ட் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அறிமுக வீரர் ஸல்ஃபிகர் பாபர் 4 ஓவர்களில் 23 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் வெற்றி: 153 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் நசிர் ஜம்ஷெட் 6, அஹமது ஷெஸாத் 3, கேப்டன் ஹபீஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், அறிமுக வீரர் உமர் அமின் அதிரடியாக விளையாட, பாகிஸ்தானின் ஸ்கோர் உயர்ந்தது.

    அந்த அணி 77 ரன்களை எட்டியபோது உமர் அக்மலும் (9), 86 ரன்களை எட்டியபோது உமர் அமினும் ஆட்டமிழந்தனர். 34 பந்துகளைச் சந்தித்த உமர் அமின் 9 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார்.

    இதன்பிறகு களம்புகுந்த ஷாகித் அப்ரிதி, தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கினார். தொடர்ந்து வேகம் காட்டிய அப்ரிதி 27 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. சாமுவேல்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஸல்ஃபிகர் பாபர், 4-வது பந்தில் ஒரு ரன் எடுக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.

    ஆனால் 5-வது பந்தில் அஜ்மல் ஆட்டமிழக்க, பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ஸல்ஃபிகர் பாபர் சிக்ஸர் அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்தார்.

    மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் காபிரியேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் இரு ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.

    அப்ரிதி 400-வது சிக்ஸர்!

    இந்த ஆட்டத்தில் அப்ரிதி 2-வது சிக்ஸரை அடித்தபோது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 400-வது சிக்ஸரைப் பதிவு முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    இதுவரை 359 ஒருநாள் போட்டிகளில் 314 சிக்ஸர்கள், 27 டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்ஸர்கள், 60 இருபது ஓவர் போட்டிகளில் 34 சிக்ஸர்கள் என மொத்தம் 446 சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்துள்ளார் அப்ரிதி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai