Enable Javscript for better performance
அடுத்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்- Dinamani

சுடச்சுட

    
    kapil

    2015-ம் ஆண்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை இந்திய அணிக்கு உள்ளது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய அணி வெற்றிகளைப் பெற்று வருவதே அதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர் என்ற பெருமையைப் பெற்ற கபில் தேவ், மெல்போர்னில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பட்டம் வென்றுள்ளது. இது அணி வீரர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போன்ற போட்டிகளில் ஆட்ட நுணுக்கங்கள் குறித்து வெளிநாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொள்வது, இந்திய வீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று. அங்குள்ள சூழல் இந்தியாவில் உள்ளதைப் போல் இருக்காது. இருப்பினும் உலகக் கோப்பையை அடுத்தடுத்து வெல்லும் திறமை இந்திய அணிக்கு உள்ளது. டெண்டுல்கர், கும்ப்ளே, கங்குலி போன்ற முன்னணி வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகும்போது, அந்த இடத்தை நிரப்புவது கடினம். அதற்கு சிறிது காலமாகும். ஆனால், தற்போது தோனி தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்று தெரிவித்தார்.

    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பலம் வாய்ந்த நாடுகளின் 2-வது பிரதான அணி, கத்துக்குட்டிகளாகக் கருதப்படும் சிறய அணிகளுடன் தொடர்ந்து விளையாடி வர வேண்டும். அப்போது மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது நிலையை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியில் சரியான விகிதத்தில் வீரர்களை மாற்றியது தற்போது சிறந்த விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானை வீழ்த்தியதை மறக்க முடியாது

    1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது நீங்காமல் நினைவில் உள்ளதாக கபில் தேவ் பெருமிதம் கொண்டார்.

    ""1992 உலகக் கோப்பை போட்டியிலிருந்துதான் ஒவ்வொரு அணிகளும், கலர் உடைகளில் களம் கண்டன. இதில், இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், அப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதை சிறந்ததாகக் கருதுகிறேன். அந்த ஆட்டத்தில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது'' என்று தெரிவித்தார்.

    9 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி 7-வது இடத்தைப் பிடித்தது. லீக் சுற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றிருந்தாலும், உலகக் கோப்பையை அந்த அணியே வென்றது நினைவுகூரத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai