Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: தொடரை தக்க வைக்குமா ஆஸ்திரேலியா?- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, பின்னடைவைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலிய அணி தொடரைத் தக்க வைக்க கடினமாகப் போராட வேண்டியுள்ளது.

    மோசமான பேட்டிங்கில் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் திரும்பியுள்ளது பலத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பது இன்னும் உறுதியாகவில்லை.

    இப்போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சதமடிக்கவில்லை. தொடக்க வீரரான ரோஜர்ஸ் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 89 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அந்த அணியில் தொடக்கம் விரைவாகச் சரிவதே, ரன் குவிக்க முடியாததற்குக் காரணம். பந்து வீச்சில் காயம் காரணமாக பட்டின்ஸன் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜேக்சன் பேடு, மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் விளையாடுவர் என்று தெரிகிறது.

    இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மற்றும், ஆஷஸ் தொடரில் 2 போட்டிகள் என மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் போராடுவர்.

    வென்றால் தொடர் வசமாகும்: அதேசமயம், மான்செஸ்டர் நகரில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வென்றால் தொடர் தங்கள் வசமாகி விடும் என்ற உறுதியில் அந்த அணி வீரர்கள் களம் காண்கின்றனர். இங்கிலாந்து அணியின் பேட்டிங் சிறந்த பார்மில் உள்ளது. கெவின் பீட்டர்சன் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக ஜேம்ஸ் டெய்லர் களமிறங்குகிறார். ஆனால், குக், பெல், ரூட், டிராட் உள்ளிட்ட வீரர்கள் அக்குறையைப் போக்குவர்.

    அணியில் பனேசர்: இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சில், கிரேம் ஸ்வானுடன் இணையவுள்ளார் மாண்டி பனேசர். இவர்கள் இருவரும் இந்த ஆட்டத்தில் துருப்புச் சீட்டுகளாக இருப்பர். அதேபோல், இத்தொடரில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆண்டர்சன் எதிரணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை அளிப்பார்.

    கடந்த இரு போட்டிகளிலும் வீரர்களின் கூட்டு முயற்சியினாலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது. பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் பலமாக உள்ள இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது ஆஸ்திரேலியாவுக்கு கடினமான காரியம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai